ஸ்ரீரங்கத்தில் பட்டப்பகலில் ரவுடி கொலை - 8 பேர் கைது

ஸ்ரீரங்கத்தில் பட்டப்பகலில் ரவுடி கொலை - 8 பேர் கைது
X
நெடுங்கூர் பகுதியில் சேவல் சண்டை போட்டியில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை
திருச்சி, ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியை சேர்ந்த தர்மராஜின் மகன் அன்பு என்கிற அன்பரசன். ரவுடியான இவர் நேற்று (28-01-2025) காலை தன்னுடைய இருசக்கர வாகனத்தில் உடற்பயிற்சி செய்துவிட்டு ஸ்ரீரங்கம் தெப்பக்குளம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த 8 பேர் கொண்ட கும்பல் அன்புவை துரத்தியுள்ளனர். இதனால், ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்பதை உணர்ந்த அவர் வாகனத்தை விட்டு விட்டு ஓடினார். அப்போது அவரை அந்த கும்பல் ஓட, ஓட விரட்டி சென்று வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி சென்று விட்டது. பட்டப்பகலில் அதுவும் ஆட்கள் மிகுந்த இடத்தில் இந்த கொலை சம்பவம் அரங்கேறியதால் அப்பகுதி மக்கள் சிதறி ஓடினார்கள். இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அன்புவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அன்புவின் உறவினர்கள் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் இதில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமாதானப்படுத்தினர். இந்த கொலை குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஸ்ரீரங்கம் மேலூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் மகன் தினேஷ்பாபு கடந்த வருடம் மே மாதம் திருச்சி நெடுங்கூர் பகுதியில் சேவல் சண்டை நடத்துவதற்காக அவரது கூட்டாளியுடன் சென்றுள்ளார். தினேஷ்பாபு பிரபல ரவுடி திலீப் சித்தப்பா மகன் ஆவார். அப்போது நெடுங்கூர் பகுதியில் சேவல் சண்டை நடத்தக் கூடாது என அன்பு தட்டிக் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும், சேவல் சண்டை போட்டியை நடத்திய தீருவேன் என தினேஷ் பாபு தெரிவித்துள்ளார். அவர்களை ரவுடி திலீப் அழைத்து சமாதானம் பேச அழைத்துள்ளார். அப்போது திலீப்பின் முன்பு, தினேஷ்பாபு நான் சேவல் சண்டை நடத்துவதில் என்ன பிரச்சனை என எதிர்த்து பேசியுள்ளார். அதற்கு அன்பு, திலீப்பை எதிர்த்து பேசுகிறாயா என தினேஷ்பாவுவை மண்டியிட வைத்து அடித்து உள்ளார். இதை திலீப்பும் தட்டிக் கேட்காமல் அமைதியாக இருந்து உள்ளார். இதனால், அவமானம் அடைந்த தினேஷ்பாபு, அன்பு மீது ஆத்திரத்தில் இருந்தார். ஆத்திரம் தீராத தினேஷ்பாபு சென்னை காசிமேடை சேர்ந்த லோகேஷை தொடர்பு கொண்டு அன்புவை கொல்ல திட்டம் தீட்டி இந்தக் கொலையை செய்தது தெரிய வந்தது. இந்த கொலையில் சம்பந்தப்பட்ட ஸ்ரீரங்கத்தை சேர்ந்த தினேஷ்பாபு(28), சென்னையை சேர்ந்த லோகேஷ்(23), ஸ்ரீரங்கத்தை சேர்ந்த மகாபிரபு(23), அய்யனார்(22), கோபால கிருஷ்ணன்(23), திருவானைக்காவலை சேர்ந்த ரகுபதி, சச்சின் விஜய் (21), தீபக்ராகுல் (22) ஆகிய 8 பேரை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story