தோடர் இன மக்களின் கோவிலில் கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு கூரை மாற்றும் பணி இன்று நடைபெற்றது...

ஆடல் பாடல் என கலை கட்டியது
உதகை தாவரவியல் பூங்கா அருகே உள்ள கார்டன் மந்து பகுதியில் தோடர் இன மக்களின் கோவிலில் கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு கூரை மாற்றும் பணி இன்று நடைபெற்றது... மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் தோடர்கள், கோத்தர்கள், குரும்பர்கள், காட்டு நாயக்கர்கள், இருளர்கள் போன்ற ஆதிவாசி மக்கள் மலைப்பகுதிகளில் வசித்து வருகின்றனர். இந்த ஆதிவாசி மக்களின் திருமணம், கோவில் நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்கள் பாரம்பரியமிக்கதாகவும், பழமை வாய்ந்ததாகவும் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் மந்து என்று அழைக்கப்படுகின்ற 14 இடங்களில் தோடர் இனமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த 14 மந்துகளுக்கு தலைமையிடமாக உதகை அருகே உள்ள முத்தநாடு மந்து விளங்கி வருகிறது. உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகே கார்டன் மந்து உள்ளது. இந்த மந்தில் தோடர் இன மக்களின் தெய்வமான “நார்ஸ் நார்ஸ்” கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு கூரைவேயும் பணி இன்று நடைபெற்றது. இதில், ஏராளமான தோடர் இனமக்கள் தங்களுடைய பாரம்பரிய உடை அணிந்து கூரைவேயும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பின்னர் தங்களது பாரம்பரிய உடை அணிந்து, பாரம்பரிய நடனம் ஆடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
Next Story