ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் கொலை வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை

X
அரியலூர், மார்ச் 21 அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள இலைக்கடம்பூர் காலனித் தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் கலைமணிக்கும் (25). பெருமாள் மகன் ரவிச்சந்திரன்(56) குடும்பத்தினருக்கும் இடையே சாக்கடை வடிகால் பிரச்னை இருந்து வந்தது. கடந்த 17.5.2020 அன்று அவர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன் மகன் அரவிந்தன்(32), ரவிச்சந்திரன் சகோதரர் சேகர் மனைவி வளர்மதி(50), இவரது மகன்கள் அகிலன்(26), கபிலன்(25), பவித்ரன்(23), ரவிச்சந்திரன் தங்கை கலா(45), இவரது கணவர் குருசாமி(52) ஆகியோர் கலைமணியை தாக்கினர். அப்போது அங்கு வந்த கந்தசாமி கலைமணியை வீட்டினுள் வைத்து பூட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மேற்கண்ட நபர்கள் இரும்பினால் கந்தசாமியை தாக்கி கொலைறனர். இதுகுறித்து செந்துறை காவல் துறையினர் வழக்குப் பதிந்து மேற்கண்ட 8 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி டி.மலர்வாலண்டினா குற்றவாளிகள் ரவிச்சந்திரன், அரவிந்தன், வளர்மதி, அகிலன், கபிலன், பவித்ரன், கலா, குருசாமி ஆகிய 8 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கலா தனது கழுத்தில் துண்டை சுற்றிக்கொண்டு நீதிமன்றத்தில் தூக்கிட்டுக்கொள்ள முயன்றார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞர் முத்தமிழ்செல்வன் ஆஜராகினார். பட விளக்கம்: இலைக் கடம்பூர் ரயில்வே ஊழியர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள குற்றவாளிகள்.
Next Story

