திருச்செந்தூரில் திடீரென 80 அடி உள்வாங்கிய கடல்!
Thoothukudi King 24x7 |26 Nov 2024 3:44 PM GMT
திருச்செந்தூரில் திடீரென 80 அடி உள்வாங்கிய கடல். ஆபத்தை உணராமல் பாறைகள் மேல் நின்று செல்பி எடுக்கும் ஐயப்ப பக்தர்கள்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவிழா நாட்களில் மற்றும் விடுமுறை தினங்களில் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இதைத்தவிர பௌர்ணமி தினங்களில் அதிகளவில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் இன்று முதல் 29 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவித்துள்ளது. இதற்கிடையில் திருச்செந்தூரில் காலை முதலே கடலின் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. மேலும் மதியத்திற்கு மேல் திருச்செந்தூர் பகுதியில் பரவலான சாரல் மழையும் பெய்து வந்தது. இந்த நிலையில் தற்போது சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள கடல் சுமார் 80 அடி உள்வாங்கி காணப்படுகிறது. நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை 500 மீட்டர் தூரத்திற்கு பச்சை படிந்த பாறைகள் வெளியே தெரிகிறது. அதன்மேல் நின்றபடி ஆபத்தை உணராமல் ஐயப்ப பக்தர்கள் செல்பி எடுத்து வருகின்றனர். மேலும் கடலில் தூண்டில் வைத்து சிறுவர்கள் மீன்களை பிடித்து வருகின்றனர். கடல் உள்வாங்கிய பகுதிகளில் காவல்துறையினர் மற்றும் கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியினர் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story