சிறுமலையில் ஒரு பலா பழம் 800 ரூபாய் வரை விற்பனை
Dindigul King 24x7 |3 Sep 2024 3:16 AM GMT
திண்டுக்கல் சிறுமலையில் ஒரு பலா பழம் 800 ரூபாய் வரை விற்பனை ஆவதால் விவசாயிகள் மகிழ்ச்சி.
கனிகளில் முதன்மையான கனிகளாக மா, பலா, வாழையை முக்கனிகளாக குறிப்பிடுவர். இந்த முக்கனிகளையும் அதிகளவில் விளைவிக்க கூடிய ஒரு மாவட்டமாக திண்டுக்கல் மாவட்டம் அமைந்துள்ளது. இத்தகைய சிறப்பு பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது சிறுமலை. இங்கு ஏராளமான மூலிகைகள் உள்ளதால் இந்த மலையை சஞ்சீவி மலையின் ஒரு சிறு பகுதி என இம்மலையில் வாழும் மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். இந்த சிறுமலையில் பலாப்பழம், மலை வாழைப்பழம், மிளகு, எலுமிச்சை, காபி, சௌ சௌ, அவரை, உள்ளிட்ட மாலை பயிர்கள் விளைவிக்கப்படுகிறது. 18 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட இந்த மலையில் விவசாய நிலங்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் இருக்கும், எனவே இங்கு விளையும் பொருட்களை குதிரை மீது பொதியாகவோ அல்லது அப்பகுதி விவசாயிகளே தலைசுமையாகவோ காடுகளில் இருந்து சுமந்து வருகின்றனர். இங்கு விளைவிக்கப்படும் விவசாய பொருட்கள் மூலிகை தன்மையுடன் இருப்பதால் மக்கள் சிறுமலை பகுதியில் விளைவிக்கப்படும் விவசாயப் பொருட்களை அதிகம் வாங்கிச் செல்வர். இங்கு விளைவிக்கப்படும் பலாப்பழம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும், சிறுமலையில் விளையும் பலாப்பழம் மிகவும் சுவையாகவும், எடை அதிகம் கொண்ட பலா சுளைகளை கொண்டதாகவும் இருக்கும், எனவே மக்கள் சிறுமலை பலா பழங்களை மிகவும் விருப்பமுடன் வாங்கிச் செல்வர். பலாப்பழத்தின் விலை அதன் சுளைகளை கொண்டே நிர்ணயம் செய்யப்படுகிறது, எனவே சுளைகளின் தரம் மற்றும் பழத்தின் எடைக்கு ஏற்ப மலை பகுதிகளில் ரூபாய் 100 முதல் 800 ரூபாய் வரையிலும், தரை பகுதியில் 250 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை பழம் விற்பனை செய்யப்படுகிறது. தற்பொழுது பலாபழங்கள் அதிகவிலைக்கு விற்பனையாவதால் வியாபாரிகளும், விவசாயிகளும் மகிழ்ச்சியுடன் உள்ளனர். இங்கு விளையும் சிறுமலை மலைவாழைப் பழம் புவிசார் குறியீடு பெற்றுள்ளது என்பது குறிப்பிட தக்கது.
Next Story