சேலம் அருகே ஜருகுமலை கிராமத்தில் ரூ.8.40 லட்சம் மானியத்தொகை வழங்காமல் அலைக்கழிப்பு

X
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியம் ஜருகுமலை கிராமத்தை சேர்ந்த மகளிர் சுயஉதவிக்குழுவை சேர்ந்த பெண்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் பிருந்தாதேவியை சந்தித்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- நாங்கள் மரகதப் பெண்கள் மகளிர் சுயஉதவிக்குழு என்ற பெயரில் குழு நடத்தி வருகிறோம். நாங்கள் ஜருகுமலையில் அரளி பூ மற்றும் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்து தொழில் செய்வதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தோம். அதன்பேரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அரசு மானியமாக ரூ.8 லட்சத்து 40 ஆயிரம் அனுமதி அளித்து வங்கி காசோலையை அதிகாரிகள் கொடுத்தனர். அதன்பிறகு அந்த காசோலையை எடுத்துக்கொண்டு பனமரத்துப்பட்டியில் உள்ள கூட்டுறவு வங்கிக்கு சென்று கேட்டபோது, மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்காததால் சம்பந்தப்பட்ட கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்று தெரிவித்துவிட்டார்கள். இதனால் கடந்த 7 மாதங்களாக மானியத்தொகை வழங்காமல் அலைக்கழிப்பு செய்யப்பட்டு வருகிறோம். அரசு வழங்கிய மானிய தொகை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறோம். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக எங்களுக்கு வரவேண்டிய மானியத்தொகையை உடனே வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story

