மருத்துவக் கல்வியில் மாநில உரிமைகள் பறிக்கப்படுவதைக் கண்டித்து மார்ச் 9-இல் ஆர்ப்பாட்டம்

X
மருத்துவக் கல்வியில் மாநில உரிமைகள் பறிக்கப்படுவதைக் கண்டித்து, சென்னையில் மார்ச் 9 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. தஞ்சாவூரில் சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம், தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களிடம் சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலர் ஜி.ஆர். ரவீந்திரநாத் தெரிவித்தது: எம்.பி.பி.எஸ். தவிர முதுநிலை மற்றும் மருத்துவ மேற்படிப்புகளில் மாநில அரசுகள் தங்களுக்கென வசிப்பிட அடிப்படையில் இடங்களை வைத்துக் கொள்ளக் கூடாது என்றும், நாம் அனைவரும் இந்தியாவில்தான் வசிப்பதால், மாநிலங்கள் தங்களுக்கென தனி ஒதுக்கீடு வைத்துக் கொள்வது என்பது அரசியலமைப்பு சட்டத்தின் 14 ஆவது பிரிவுக்கு எதிரானது எனவும், எனவே, அனைத்து முதுநிலை மருத்துவ இடங்களையும், மேற்படிப்பு இடங்களையும் அகில இந்தியாவுக்கும் பொதுவானதாக்க வேண்டும் எனவும் என 3 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு ஜனவரி 29 ஆம் தேதி தீர்ப்பளித்தது. இது, மாநில உரிமைகளுக்கும், கூட்டாட்சி கோட்பாட்டுக்கும், ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்கும், அரசு மருத்துவர்களின் இட ஒதுக்கீட்டுக்கும், பெண்களின் உரிமைகளுக்கும் எதிரானதாக உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் இளநிலை, முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவ இடங்களைப் போதிய அளவுக்கு உருவாக்க வேண்டும். அதை விடுத்து ஒரு சில மாநிலங்களில் அதிகமாக உள்ள மருத்துவ மேற்படிப்பு இடங்களை பிற மாநிலங்களுக்கு பறித்துக் கொடுப்பது மாநிலங்களின் நல்லிணக்கத்தை பாதிக்கும். மாநிலங்களிடையே முரண்பாடுகளையும், மோதல்களையும் அதிகரிக்கும். எனவே, மருத்துவக் கல்வியில் மாநிலங்களின் உரிமைகளை ஒன்றிய அரசு பறிப்பதைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் இணைந்து சென்னை ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் மார்ச் 9 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. இதில், அனைத்து மருத்துவர்கள் சங்கங்கள், அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றுவர் என்றார் ரவீந்திரநாத். இக்கூட்டத்துக்கு மாநிலச் செயலர் ஏ.ஆர்.சாந்தி தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் இசட். முகம்மது புகாரி, எம்.என்.அப்ரார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story

