வெள்ளி கட்டிகள் மாயமான வழக்கில் 9 பேர் கைது செய்து சிறையில் அடைப்பு
திருவள்ளூர் காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட கண்டெய்னரில் இருந்து 9கோடி ரூபாய் மதிப்பிலான வெள்ளி கட்டிகள் மாயமான வழக்கில் 9 பேர் கைது செய்து சிறையில் அடைப்பு. 5 கோடி மதிப்பிலான வெள்ளிக்கட்டிகள் மீட்பு. சென்னை ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த தனியார் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் ஒன்று லண்டனிலிருந்து 2கண்டைனர்கள் மூலம் சுமார் 39 டன் வெள்ளிக்கட்டிகளை இறக்குமதி செய்தது. 2கண்டெய்னர்கள் மூலம் வந்த வெள்ளி கட்டிகளை துறைமுகத்திலிருந்து லாரிகள் மூலம் தங்களது வேர் ஹவுஸ் நிறுவனத்திற்கு கொண்டு சென்று தனியார் நிறுவனம் ஆய்வு செய்தது. 20 டன் எடை கொண்ட வெள்ளி கட்டிகள் வந்த கண்டைனர் பெட்டி சரியாக இருந்த நிலையில், 19 டன் எடை கொண்ட வெள்ளி கட்டிகள் வந்த கண்டைனர் பெட்டியில் எடை குறைவாக இருந்தது தெரியவந்தது. தொடர் ஆய்வில் சுமார் 9 கோடி ரூபாய் மதிப்பிலான 922 கிலோ எடை கொண்ட 30 வெள்ளிக்கட்டிகள் மாயமானது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கண்டெய்னரில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் கருவியை தனியார் நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்த போது அதானி துறைமுகத்திலிருந்து சரக்குகளை வெளியே அனுப்புவதற்கு முன்பாக கண்டெய்னர் பெட்டி திறக்கப்பட்டிருப்பது உறுதியானது. இதனையடுத்து தனியார் நிறுவனத்தின் மேலாளர் தாசரி ஸ்ரீஹரி ராவ் இது தொடர்பாக காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காட்டூர் போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டனர். இந்த திருட்டில் தொடர்புடைய நவீன்குமார், ஆகாஷ், அவினாஷ், தேசிங்கு, குணசீலன், சந்தோஷ், வெங்கடேஷ், முகமது, சண்முகவேல் ஆகிய 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களிடம் இருந்து காணாமல் போன வெள்ளிக் கட்டிகளில் இருந்து சுமார் 5 கோடி மதிப்பிலான 510 கிலோ எடை கொண்ட 17 வெள்ளிக் கட்டிகள், 40 லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன. எஞ்சிய வெள்ளிக் கட்டிகளை பறிமுதல் செய்வது குறித்து மேலும் சிலரை பிடித்து காட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story



