ஜூலை 9ஆம் தேதி நடைபெறும் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் வெற்றி பெறச் செய்ய வலியுறுத்தல்

X
ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத, தொழிலாளர்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து, மத்திய தொழிற்சங்கங்கள் ஜூலை 9ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த வேலை நிறுத்தத்தை தஞ்சை மாவட்டத்தில் வெற்றி பெறச் செய்வதற்கு அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம், செவ்வாய்க்கிழமை காலை மணிமண்டபம் மின்வாரிய தொமுச அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஏஐசிசிடியு மாவட்டத் தலைவர் கே.ராஜன் தலைமை வகித்தார். கூட்டத்தில் சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால், தொமுச மாவட்டச் செயலாளர் கு.சேவியர், ஏஐடியுசி மாநிலச் செயலாளர் ஆர்.தில்லைவனம், ஐஎன்டியுசி மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ், ஹெச்.எம்.எஸ் மாவட்டச் செயலாளர் ஏ.சின்னப்பன், யூடியூசி மாவட்டச் செயலாளர் த.மோகன்தாஸ் ஆகியோர் வேலை நிறுத்தத்தின் நோக்கங்களை விளக்கிப் பேசினர். கூட்டத்தில் பொதுமக்களுக்கு சிறப்பான சேவை செய்து வரும் போக்குவரத்து கழகங்கள், மின்சாரம், வங்கிகள், இன்சூரன்ஸ், நிலக்கரி சுரங்கம், ஆயுத தொழிற்சாலை உள்ளிட்ட மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் அனைவருக்கும் குறைந்தபட்சம் மாத ஊதியம் ரூபாய் 26 ஆயிரம் ஆக வழங்க வேண்டும். அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூபாய் 9,000 ஆக நிர்ணயம் செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் காலிப் பணியிடங்களில் கான்ட்ராக்ட், ஒப்பந்த, அவுட்சோர்சிங் முறைகளை கைவிட வேண்டும். நேரடி நியமனம் மூலம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். அனைத்து தரப்பினரையும் பாதிக்கின்ற புதிய மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் மின்சார திருத்த சட்டம் கைவிடப்பட வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் நிதி அதிகம் ஒதுக்க வேண்டும். நிலுவையில் உள்ள நிதியை உடனடியாக மாநில அரசுக்கு வழங்க வேண்டும். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாயிகள் கடன் பெறுவதற்கு கூட்டுறவு சங்கங்கள் சிபில் ஸ்கோர் கட்டாயம் என்ற நடைமுறையை கைவிட வேண்டும். புதிய மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டங்களை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப் படுத்த வேண்டும். அங்கன்வாடி மக்களைத் தேடி மருத்துவம் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 9ஆம் தேதி நடைபெறும் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய நான்கு மையங்களில் நடைபெறும் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும். ஜூலை 9ஆம் தேதி காலை 10 மணிக்கு தஞ்சாவூர் ஆற்றுப்பாலத்தில் இருந்து பேரணி புறப்பட்டு, தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் வந்தடைந்து மறியல் போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் அனைத்து வணிகர் சங்கங்கள், அனைத்து ஆட்டோ தொழில்சங்கங்கள், அரசு மற்றும் பொதுத்துறை, தனியார் துறை நிறுவனங்களின் பணியாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளிட்டு அனைவரும் பங்கேற்று வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. கூட்டத்தில் சிஐடியு சார்பில் இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தஞ்சை கோட்ட தலைவர் எஸ்.செல்வராஜ், அரசு விரைவு போக்குவரத்து சங்க தலைவர் சா.செங்குட்டுவன், மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சாய் சித்ரா, மின் ஊழியர் மத்திய அமைப்பு தஞ்சை மாவட்ட தலைவர் ஏ.அதிதூத மைக்கேல் ராஜ் தொமுச நிர்வாகிகள் பாஸ்டின், பிரகாஷ், ஏஐடியுசி சார்பில் மாவட்ட தலைவர் வெ.சேவையா, பொருளாளர் தி.கோவிந்தராஜன், போக்குவரத்து சங்க மாநில துணைத்தலைவர் துரை.மதிவாணன், மின்வாரிய சங்க மாநில துணைத்தலைவர் பொன்.தங்கவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story

