தஞ்சாவூர் மாவட்டத்தில் சமுதாய வளைகாப்பு விழாவில் 9,200 கர்ப்பிணிகள் பயனடைந்தனர் - ஆட்சியர்

X
தஞ்சாவூர் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழாவில் பயனடைந்த கர்ப்பிணித் தாய்மார்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்ததாவது. தமிழ்நாடு அரசு, பெண்களின் நலன் காக்க கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், புதுமை பெண் திட்டம், ஊட்டச்சத்து பெட்டகம், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் கடனுதவி, விடியல் பயணம் போன்ற பல்வேறு திட்டங்களை இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், பெண்கள் நலன் காக்கும் உன்னதமான திட்டமான 'சமுதாய வளைகாப்பு விழா எல்லோராலும் போற்றப்படுகிற திட்டமாகும். சமுதாய வளைகாப்பு விழாவிற்கு 16 வட்டாரங்களுக்கும் கடந்த நான்கு ஆண்டுகளில், 2021-2022 ம் ஆண்டு ரூ.9லட்சம், 2022-2023 -இல் 9 லட்சம், 2023-2024 -இல் 4 லட்சம், 2024-2025 -இல் 4 லட்சம் ஆக மொத்தம் ரூ.26 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் மூலம் 9,200 கர்ப்பிணி பயனாளிகள் பயனடைந்துள்ளனர். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு விழா தஞ்சாவூர் மாவட்டத்தில், 16-வட்டாரங்களிலும் செயல்படும் 1,749 அங்கன்வாடி மையங்களிலும் பதிவு செய்யப்பட்டு இணை உணவு பெற்று பயன் அடையும் 400 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தாம்பூழம் தட்டுடன் கூடிய பூமாலை, வளையல், மங்கலநாண், மஞ்சல், குங்குமம், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், காப்பரிசி, மற்றும் வேப்பம் காப்பு வழங்கப்பட்டது. இவற்றுடன் அனைவருக்கும் மதிய உணவு வகைகளாக எலும்பிச்சை சாதம், தயிர் சாதம், புளி சாதம், சாம்பார் சாதம், சர்க்கரை பொங்கலும் புதினா துவையல், ஊறுகாய், சிப்ஸ், அரிசி வடகம் ஆகியவை வழங்கப்பட்டது" என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார்.
Next Story

