புதுக்கடை: 93 கிலோ புகையிலை பறிமுதல்

X

ஒருவர் கைது
புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்டதும், மனித உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடியதுமான புகையிலை பொருட்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் புதுக்கடை சப் இன்ஸ்பெக்ட்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் நேற்று தேங்காபட்டணம் அருகே பரக்காணி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு கட்டிடத்தில் சோதனை செய்தனர். அந்த கட்டிடத்தில் மூடைகளில் கட்டி வைத்த தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அங்கிருந்து புகையிலை பொருட்களை கொண்டு செல்ல வந்த நபரும் பிடிபட்டார். தொடர்ந்து அந்த கட்டிடத்தில் இருந்து புகையிலை மூடைகளை பறிமுதல் செய்த போலீசார் புதுக்கடை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். போலீசாரின் விசாரணையில்யில் பிடிபட்ட நபர் புதுக்கடை, தோட்டவாரம் பகுதி கிருஷ்ணகுமார் (39) என்பது தெரிய வந்தது. மேலும் அவர் பரக்காணியில் ஒரு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து, அதில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்பது தெரிய வந்தது. நேற்று புகையிலை பொருட்களை வினியோகம் செய்ய எடுக்க வந்த போது, போலீசிடம் சிக்கியுள்ளார். தொடர்ந்து அவரிடமிருந்து சுமார் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான 90 கிலோ கணேஷ் புகையிலை பொருட்கள், ரூ. 6, 240 மதிப்பிலான 13 கிலோ கூல் லிப் புகையிலை மொத்தம் 93 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து, இன்ஸ்பெக்டர் மாரியப்பன் விசாரித்து வருகிறார்.
Next Story