குமரியில் 95 ஊராட்சிகளில் பொறுப்பு அலுவலர்கள் நியமனம்

X
குமரி மாவட்டத்தில் உள்ள 95 கிராம ஊராட்சிகளிலும் பாரபட்சமின்றி பணிகள் நடைபெறும் வகையில் பொறுப்பு அலுவலர்கள்(நோடல் ஆபீசர்) நியமிக்கப்பட்டுள்ளனர். அடுத்தகட்டமாக பல ஆண்டுகள் தொடர்ச்சியாக சொந்த கிராமங்களிலே பணிபுரிவோர்களை இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள கிராம ஊராட்சிகளில் ஊராட்சி தலைவர்கள் இல்லாத நிலையில் செயலர்கள் எனப்படும் தனி அலுவலர்களால் கிராம ஊராட்சிகளின் அரசு திட்டங்கள், மற்றும் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. இவற்றில் பல கிராம ஊராட்சிகளில் அதே பகுதிகளை சேர்ந்தவர்களே தனி அலுவலர்களாக 25 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றுவதால் பாரபட்சத்துடனும், விருப்பு வெறுப்புடன் பணிகள் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. வசூல் வேட்டை நடத்தும் கிராம பஞ்சாயத்துக்களின் தனி அலுவலர்கள் குறித்து குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனாவிற்கு தொடர் புகார் சென்றது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி தனி அலுவலர்கள் குறித்து குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா விசாரணை மேற்கொண்டார். பாரபட்சமாக பணிகள் நடைபெறாமல் இருக்கும் வகையில் அதே கிராம பகுதியை சொந்த இடமாக கொண்டு பணியாற்றும் தனி அலுவலர்களை வேறு கிராம ஊராட்சிகளில் பணியாற்ற ஊரக வளர்ச்சித்துறை திட்ட அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பணிகளில் முறைகேடின்றி, சிறப்பான முறையில் ஊராட்சி நிர்வாகம் நடைபெறும் வகையில் ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் அலுவலர்களை ஊராட்சிகளுக்கு பொறுப்பு அலுவலர்களாக நியமனம் செய்து குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டுள்ளார்.
Next Story

