வழக்கறிஞரிடம் ரூ 96 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியவர் கைது.

வழக்கறிஞரிடம் ரூ 96 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியவர் கைது.
வழக்கறிஞரிடம் ரூ 96 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியவர் கைது. இது தொடர்பாக கரூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடியை சேர்ந்த பிரின்ஸ் கிப்ஸன் என்பவர் கரூரை அடுத்த கோதூரில் சுமார் 07 ஏக்கர் நிலம் வாங்குவது தொடர்பாக கரூரைச் சேர்ந்த R.S. ராஜா என்ற நில தரகரிடம் முன்பணம் ரூ. 96,00,000/- கொடுத்து ஒரு மாத காலத்திற்குள் கிரையம் செய்துவிடுவதாக கூறியவர், கிரையம் செய்ய காலதாமதம் செய்ததால் நில உரிமையாளர்கள் அந்த நிலத்தை வேறு ஒருவருக்கு விற்றுவிட்டனர். இதனால் மேற்படி பணம் ரூ. 96,00,000/- த்தை திரும்ப பிரின்ஸ் கிப்ஸனிடம் கொடுத்தபோது அவர் அதை வாங்க மறுத்து தனக்கு பணம் வேண்டாம், நிலம்தான் வேண்டும் என்று தென்மாவட்டத்தை சேர்ந்த முக்கிய நபர் ஒருவரை அழைத்து வந்து மத்தியஸ்தம் செய்துள்ளார். அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையறிந்த கரூர் வாங்கலை சேர்ந்த பாலமுருகன் என்பவர் தான் இந்த விஷயத்தை முடித்து தருவதாக R.S. ராஜாவிடம் கூறி மேற்படி தொகை ரூ. 96,00,000/- த்தை தன்னிடம் கொடுக்கும்படியும், தான் பிரின்ஸ் கிப்ஸனிடம் கொடுத்து பிரச்சனையை முடித்து தருவதாக கூறியுள்ளார். அதனால் மேற்படி பாலமுருகனை நம்பி, R.S. ராஜா கரூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிவரும் ரகுநாதன் என்பவர் மூலமாக பணம் ரூ. 96,00,000/- கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட பாலமுருகன் மேற்படி தொகையை பிரின்ஸ் கிப்ஸனிடம் கொடுக்காமல் தானே வைத்துக் கொண்டதையறிந்த வழக்கறிஞர் ரகுநாதன் பாலமுருகனிடம் ரூ. 96,00,000/- த்தை திருப்பி தருமாறு பலமுறை கேட்டும் பாலமுருகன் பணத்தை திருப்பி தராததால், வழக்கறிஞர் ரகுநாதன் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லாவிடம் கொடுத்த புகாரின் பேரில் கரூர் மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்து, வழக்கின் எதிரியான பாலமுருகனை இன்று காலை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். மேலும் இவ்வழக்கு சம்மந்தமாக புலன்விசாரணை நடைபெற்றுவருகிறது என தெரிவித்துள்ளனர்.
Next Story