கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளுக்கு கூலியை உயர்த்த முத்தரப்பு பேச்சுவார்த்தையை தமிழக அரசு உடனடியாக நடத்த வேண்டும்!கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் MLA தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் அவர்கள் கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளுடைய வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும். தாமதமில்லாமல் உடனடியாக முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கான அழைப்பை கொடுத்து இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டு தமிழ்நாட்டில் இருக்கின்ற கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்.
கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளுக்கான கூலியை உயர்த்த முத்தரப்பு பேச்சுவார்த்தையை தமிழ்நாடு அரசு உடனடியாக நடத்த வேண்டும் என்று கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் எம்எல்ஏ தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளார் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது....தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக விவசாயிகள் நம்பியிருப்பது கறிக்கோழி வளர்ப்பு தொழில். இதையும் விவசாயிகள் விவசாயம் போலத் தான் செய்து கொண்டிருக்கிறார்கள். விவசாய நிலங்களில் ஆடு, மாடுகள் வளர்ப்பது போல கறிக்கோழியையும் வளர்த்து பெரிய நிறுவனங்களிடம் கொடுக்கிறார்கள். அவர்கள் அதை பொதுமக்களுக்கு விற்பனை செய்கிறார்கள். எப்படி விவசாயத்தில் அதிக லாபம் இல்லையோ அதைப்போல கறிக்கோழியிலும் மிகக் குறைந்த லாபத்தை பெற்றுத்தான் ஏழை விவசாயிகள் இதை செய்து கொண்டிருக்கிறார்கள். விவசாயத்தோடு சேர்த்து விவசாய நிலங்களில் கறிக்கோழி வளர்ப்பையும் செய்வதன் மூலமாகத்தான் விவசாயிகள் தங்களுடைய வாழ்வாதாரத்தை பெறுகிறார்கள். இப்படி விவசாயிகளுக்கு வாழ்வளிக்கிற கறிக்கோழி வளர்ப்பு இன்றைக்கு நடத்த முடியாத ஒரு தொழிலாக மாறிப் போயிருக்கிறது. மின்சார கட்டண உயர்வு, தீவனங்களுடைய விலை உயர்வு, இந்த தொழிலில் ஈடுபட்டிருக்கிற தொழிலாளர்கள் சம்பள உயர்வு இவை அனைத்தும் கறிக்கோழி வளர்ப்பு தொழிலை மிகப் பெரிய பாதிப்படைய செய்திருக்கிறது. ஆனால் அதற்கு ஏற்றவாறு கறிக்கோழி வளர்ப்புக்கான கூலி உயர்வு பெரிய நிறுவனங்களால் வழங்கப்படவில்லை. அந்த கூலி உயர்வை கேட்டு கறிக்கோழி வளர்க்கின்ற விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் ஆனால் பெரிய நிறுவனங்கள் அவர்களைக் கண்டு கொள்ளாமலே இருக்கிறார்கள். விவசாயிகளுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டியது அரசினுடைய கடமை. அந்த வகையில் நிறுவனங்கள், விவசாயிகள் மற்றும் அரசு தரப்பென்று முத்தரப்பு பேச்சுவார்த்தையை அரசு நடத்தி கறிக்கோழி வளர்ப்புக்கான கூலி உயர்வை விவசாயிகளுக்கு பெற்றுத் தர வேண்டும். அதன் மூலம் கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளுடைய போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அடித்தட்டு மக்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என்று அனைத்து தரப்பு மக்களுடைய வாழ்வாதாரத்தையும் அறிவிப்புகள் மூலம் பாதுகாத்துக் கொண்டிருக்கின்ற
தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் அவர்கள் கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளுடைய வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும். தாமதமில்லாமல் உடனடியாக முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கான அழைப்பை கொடுத்து இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டு தமிழ்நாட்டில் இருக்கின்ற கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். கறிக்கோழி வளர்ப்பு என்பதும் விவசாயம் சார்ந்த உப தொழில் தான். ஆடு வளர்ப்பை போல கறிக்கோழி வளர்ப்பதன் மூலமாக ஒரு சிறிய வருமானத்தை விவசாயிகள் பெறுகிறார்கள். கறிக்கோழி வளர்ப்பை விவசாயத்தோடு ஒப்பிட்டு மின்சாரத்தை இலவசமாக வழங்குவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும். தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்களுடைய நடவடிக்கைகளை எதிர்பார்த்து கறிக்கோழி விவசாயிகள் காத்திருக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Next Story