ரயில்வே தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள்- ரயில் சேவையில் மாற்றம்- PRO
ரயில்வே தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள்- ரயில் சேவையில் மாற்றம்- PRO கரூர் அருகே உள்ள வீரராக்கியம் ரயில்வே யார்டிலும், இருகூர் - திருப்பூர் பாதையில் உள்ள சூலூர் சாலை ரயில்வே யார்டிலும் தண்டவாளப் புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் வரும் மே 17, 19 மற்றும் 23, 2025 ஆகிய நாட்களில் ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பாலக்காடு டவுனில் இருந்து காலை 06.30 மணிக்குப் புறப்படும் ரயில் எண்.16844 பாலக்காடு டவுன் - திருச்சிராப்பள்ளி எக்ஸ்பிரஸ், மே 17, 2025 அன்று கரூர் ஜங்ஷனில் நிறுத்தப்படும். பராமரிப்பு பணிகள் முடிந்ததும், ரயில் கரூர் ஜங்ஷனில் இருந்து திருச்சிராப்பள்ளி ஜங்ஷனுக்கு முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரயிலாக இயக்கப்படும். இதே போல திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து மதியம் 13.00 மணிக்குப் புறப்படும் ரயில் எண்.16843 திருச்சிராப்பள்ளி - பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ், மே 17, 2025 அன்று குளித்தலையில் நிறுத்தப்படும். பராமரிப்பு பணிகள் முடிந்ததும், இதே ரயில் குளித்தலையிலிருந்து பாலக்காடு டவுன் வரை முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரயிலாக திருச்சிராப்பள்ளி சந்திப்பு - பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸின் அதே நிறுத்தங்களுடன் இயக்கப்படும். மேலும், திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து மதியம் 13.00 மணிக்குப் புறப்பட திட்டமிடப்பட்டுள்ள ரயில் எண்.16843 திருச்சிராப்பள்ளி - பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ், மே 19 மற்றும் 23, 2025 ஆகிய தேதிகளில் சூலூர் சாலையில் நிறுத்தப்படும். அங்கு நடைபெறும் பராமரிப்பு பணிகள் முடிந்ததும், ரயில் எண்.16843 திருச்சிராப்பள்ளி சந்திப்பு - பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸின் அதே நிறுத்தங்களுடன் சூலூர் சாலையில் இருந்து பாலக்காடு டவுன் வரை முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரயிலாக இயக்கப்படும் என கரூர் மாவட்டம் உள்ளடக்கிய சேலம் ரயில்வே கோட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மரியா மைக்கேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Next Story




