நாமக்கல்: மலைக்குறவன் இன மக்களுக்கு S.T.ஜாதி சான்று வழங்கக்கோரி மனு கொடுக்கும் போராட்டம்!

நாமக்கல்: மலைக்குறவன் இன மக்களுக்கு S.T.ஜாதி சான்று வழங்கக்கோரி மனு கொடுக்கும் போராட்டம்!
மலைக்குறவன் இன மக்களுக்கு S.T. ஜாதி சான்று வழங்க கோரி, நாமக்கல் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா, மூலக்குறிச்சி, முள்ளுக்குறிச்சி, சீராப்பள்ளி, ராசிபுரம், நாவல்பட்டி, மங்களபுரம், திம்மநாயக்கன்பட்டி, மத்ரூட், சேந்தமங்கலம், வடுகம், ஆட்டையாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், மலைக்குறவன் இனமக்கள், பல தலைமுறையாக குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அவர்களின் குழந்தைகள் கல்வி பயிலவும், வேலைவாய்ப்பில் இடம் பெறவும், அரசின் நலத்திட்ட உதவிகளை பெறவும், மலைக்குறவன் இன எஸ்.டி பிரிவு சான்று கேட்டு நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர். ஆனால், எஸ்.டி. ஜாதி சான்று வழங்குவதற்கு வருவாய்த் துறை அதிகாரிகள் மறுத்து வருகின்றனர்.அதனால், மலைக்குறவன் இன குழந்தைகள் ஆரம்பக்கல்வி கூட பெற முடியாத நிலை நீடித்து வருகிறது. ஒரு சில மாணவர்கள் படித்து உயர்கல்விக்கு செல்லும்போது, ஜாதி சான்று இல்லாததால், படிப்பை தொடர முடியாமல் இடை நிற்றல் நிலை ஏற்படுகிறது. பலமுறை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தும், எவ்வித விசாரணையும் மேற்கொள்ளாமல், நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகாவில் மலைக்குறவன் இன மக்கள் எஸ்.டி.,சான்றிதழ் பெற்றுள்ளனர். இந்நிலையில், மலைக்குறவன் இன மக்களுக்கு நாமக்கல் மாவட்டத்தில் எஸ்.டி சாதிச்சான்று வழங்க கோரி, நாமக்கல் ஆர்.டி.ஓ.,விடம் மனுக் கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.மலைக்குறவன் பழங்குடியினர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் தங்கவேல், சி.பி.ஐ.எம்., முன்னாள் மாவட்ட செயலாளர் ரங்கசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.பி.ஐ.எம். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட செயலாளர் சின்னுசாமி ஆகியோர் கோரிக்கை குறித்து விளக்கி பேசினர். மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான டில்லிபாபு போராட்டத்தில் பங்கேற்று பேசினார். இனச்சான்று கேட்டு இணையதளத்தில் விண்ணப்பித்துள்ள அனைத்து மலைக்குறவன் மக்களுக்கும் தடையின்றி எஸ்.டி., சான்று வழங்க வேண்டும். மலைக்குறவன் இன மக்கள் வாழும் பகுதிகளுக்கு குடிமனைபட்டா, தொகுப்பு வீடுகள், சாலை வசதி, குடிநீர், மின் இணைப்பு வசதிகள் செய்து தரவேண்டும். பூர்வ குலத்தொழிலான மூங்கில் கூடை, முறம் பின்னுவதற்கு, காடுகளில் மூங்கில் வெட்ட அனுமதி அட்டை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
Next Story