ரூ.07.25 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்

X
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (03.02.2025) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 301 மனுக்கள் பெறப்பட்டது. அம்மனுக்களில் தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அறிவுறுத்தினார். மேலும், தொழிலாளர் உதவி ஆணையத்தின் சார்பில் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புச்சாரா நலவாரியத்தின் கீழ், பணியிட விபத்தில் மரணமடைந்த பதிவு பெறாத வெளி மாநில கட்டுமானத் தொழிலாளரின் குடும்பத்தினருக்கு, ரூ.5,00,000/- மதிப்பீட்டிலான பணியிடத்து விபத்து மரணம் உதவித்தொகைக்கான ஆணையினையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 02 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,01,800/- வீதம் மொத்தம் ரூ.2,03,600/- மதிப்பீட்டிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூடர்களையும், 01 மாற்றுத்திறனாளிக்கு ரூ.15,750/- மதிப்பீட்டிலான மடக்கு சக்கர நாற்காலியினையும், 02 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.2,780 வீதம் மொத்தம் ரூ.5,560/- மதிப்பீட்டிலான காதொலி கருவிகளையும் என மொத்தம் 06 பயனாளிகளுக்கு ரூ.7,24,910/- மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி அவர்கள் உட்பட அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

