ரூ.09.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட நாடகமேடை
Sivagangai King 24x7 |24 Aug 2024 6:14 AM GMT
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.09.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட நாடகமேடையினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏரியூர் ஊராட்சி, கலுங்குப்பட்டி கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், கட்டி முடிக்கப்பட்ட நாடக மேடையினை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார் பின்னர் பேசிய அமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் வழியில் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்துத்துறைகளின் மேம்பாட்டிற்கென பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல், நாளுக்கு நாள் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையிலான புதிய திட்டங்களை தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்படுத்தி வருகிறார்கள். அதில் பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கென மகளிர் உரிமைத்தொகை, பெண் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு, அறிவிக்கப்பட்ட திட்டமான புதுமைப்பெண் திட்டம் மற்றும் இலவச பேருந்து பயண திட்டம் உள்ளிட்ட பெண்களுக்கான திட்டங்கள் பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது தவிர தற்போது உயர் கல்வி பயிலும் மாணவர்கள் ஊக்குவிக்கும் பொருட்டு, தமிழ்ப் புதல்வன் திட்டமும் அறிவிக்கப்பட்டு, உயர் கல்வி பயிலும் மாணவர்களும் தற்போது பயன்பெற்று வருகின்றனர். மக்களுக்கான திட்டங்களை அறிவித்து அதனை சிறப்பாக செயல்படுத்தி வருவது மட்டுமின்றி, தமிழக முழுவதும் சீரான வளர்ச்சியை பெற வேண்டும் என்ற உயரிய நோக்கிலும், ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது கிராமப்புறங்களின் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டே அமைகிறது என்பதனை கருத்தில் கொண்டும், கிராமப்புறங்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, அத்திட்டங்களின் கீழ் பல்வேறு மேம்பாட்டு பணிகளும் தமிழக முழுவதும் துரிதமாக நடைபெற்று வருகிறது. கிராமங்கள் நிறைந்த மாவட்டமாக திகழ்ந்து வரும் சிவகங்கை மாவட்டத்தில், அனைத்து கிராமங்களிலும் அடிப்படை தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன் தேவைகளை நிறைவேற்றும் விதமாக, சம்பந்தப்பட்ட ஊராட்சிகள் சார்பிலும் மற்றும் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலமாகவும் பல்வேறு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒட்டு மொத்த கிராமங்களின் அடிப்படை வசதி மற்றும் தேவைகள் ஆகியவற்றை நிறைவேற்றுவது ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களின் கடமையாகும். அதன்படி, திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும், தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குவது மட்டுமின்றி, வளர்ச்சிப் பணிகளையும் அனைத்து ஊராட்சிகளிலும் மேம்படுத்துவது எனது தலையாய கடமையாகும். அதன்படி, பொதுமக்களின் கோரிக்கைகளுக்கிணங்க, சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழும், கூடுதலாக தேவைப்படும் எனது சொந்த நிதியின் கீழும் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், இன்றைய தினம் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஏரியூர் ஊராட்சி, கலுங்குப்பட்டி கிராமத்தில், முன்னதாகவே பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிடும் பொருட்டு பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதனைத்தொடர்ந்து, தற்போது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2023-2024 ன் கீழ் ரூ.09.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட நாடக மேடையினையும், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, இவ்வூராட்சியில் சாலை சீரமைப்பு உள்ளிட்ட கூடுதல் தேவைகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து, தற்போது ஊராட்சியின் சார்பில் கோரிக்கைகளும் வரப்பெற்றுள்ளன. மேலும், தங்களுடைய கிராமத்தின் அடிப்படை மேம்பாட்டு தேவைகள் எதுவாக இருப்பினும், அதனை எனது கவனத்திற்கு எப்பொழுது வேண்டுமானாலும் எடுத்துரைக்கலாம். அப்பணிகளும், அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும். தனிநபர் மற்றும் கிராமங்களின் மேம்பாட்டு வளர்ச்சிக்காக செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும், அத்திட்டங்களை பெறுவதற்கான உரிய வழிமுறைகள் குறித்தும், பொதுமக்கள் முதலில் அறிந்து கொண்டு, அதன்மூலம் பயன்பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
Next Story