10 க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் மீட்பு திருச்செங்கோடு போலீசார் அதிரடி

10 க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் மீட்பு திருச்செங்கோடு போலீசார் அதிரடி
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே சீனிவாசன் பாளையத்தில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த வடமாநில தொழிலாளர்களை அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டுவதாக கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்திய போது அடைக்கப்பட்டு இருந்த 10 பேர் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட 10 பேரிடம் இருந்து பிடுங்கப்பட்ட 90 ஆயிரம் ரூபாய் பணம் அவர்களுக்கு திருப்பி வழங்கப்பட்டது. வட மாநில தொழிலாளர்கள் பத்திரமாக சொந்த மாநிலத்திற்கு திருச்செங்கோடு புறநகர் காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். காவல்துறையினருக்கு வட மாநில தொழிலாளர்கள் நன்றி தெரிவித்து கைகுலுக்கியும் செல்பி எடுத்தும் பாராட்டு தெரிவித்தனர். நேற்று சேலம் ரயில் நிலையத்திற்கு மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து பத்து நபர்கள் வந்து இறங்கினர். இவர்களை சந்தித்து தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலர் வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி காரில் ஏற்றி திருச்செங்கோடு அருகே உள்ள சீனிவாசம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு லைன் வீட்டில் அடைத்து வைத்துள்ளதாக நாமக்கல் காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணாவிற்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் திருச்செங்கோடு துணை காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணன் தகவல் தெரிவிக்கப் பட்டு டிஎஸ்பி கிருஷ்ணன் அவர்களின் உத்தரவின் பேரில் திருச்செங்கோடு காவல் ஆய்வாளர் வெங்கட்ராமன், திருச்செங்கோடு ஊரக காவல் ஆய்வாளர் தீபா, திருச்செங்கோடு ஊரக காவல் உதவி ஆய்வாளர் நந்தகுமார், ஆகியோர் கொண்ட குழுவினர் சீனிவாசம் பாளையத்தில் திடீர் சோதனை நடத்திய போது மேற்கு வங்க தொழிலாளர்களை அடைத்து வைத்திருந்த முக்கிய நபர்கள் மூன்று பேர் தப்பி ஓடி விட்டனர். காவல்துறையினர் மேற்கு வங்க மாநில தொழிலாளர்களை மீட்டு அவர்களிடம் விசாரணை செய்ததில் தாங்கள் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து வேலை தேடி வந்ததாகவும், சேலம் ரயில் நிலையத்திலிருந்து தங்களை கார் மூலம் அழைத்து வந்ததாகவும், ஒரு லைன் வீட்டில் அடைத்து வைத்து தங்களை தாக்கியதாகவும், தங்களிடமிருந்த பணம் மொத்தமாக பறித்துக் கொண்டதாகவும், மேலும் மேற்கு வங்காளத்தில் உள்ள தங்களது வீட்டிற்கு ஃபோன் செய்து ஜிபே மூலமாக பணம் பெற்றதாகவும், வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து லைன் வீட்டில் இருந்து தொழிலாளர்கள் பறிகொடுத்த ரூபாய் 90 ஆயிரத்தை மீட்டுக் தொழிலாளர்களிடம் போலீசார் கொடுத்தனர். இதனை அடுத்து அவர்களிடமிருந்து புகார் பெறப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. திருச்செங்கோடு புறநகர காவல் நிலையத்தில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டு, அவர்களுக்கு உடைகள் வழங்கப்பட்டு, சொந்த ஊர் திரும்பிச் செல்ல வாகனங்கள் ஏற்பாடு செய்து ஈரோடு ரயில் நிலையத்தில் பாதுகாப்பாக ஏற்றி காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் தங்களை மீட்டதால் காவல்துறையினருக்கு கைகுலுக்கி நன்றி தெரிவித்தும் அவர்களோடு குழு புகைப்படம் எடுத்தும் செல்பி எடுத்தும் வடமாநில தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நைதீப் பகேரா, கார்த்தி பகேரா, பினை தாஸ், சூர்யா, சுராஜ் பகேரா, சந்திப் தாஸ், தீபூ பகேரா, ராஜேஷ் பயூரி, தீப்நாத் பயூரி, ஜேத்தன் பகேரா ஆகிய நபர்கள் மீட்கப்பட்டு சொந்த ஊருக்கு ரயில் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர் தப்பி ஓடிய மூவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். வடமாநில தொழிலாளர்களை அடைத்து வைத்து அவர்களிடம் பணம் பறித்த சம்பவம் திருச்செங்கோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story