10 ஆம் வகுப்பு மாணவிக்கு ஓரே நாளில் கிடைத்த சான்றிதழ்கள்: பள்ளியில் மாணவியிடம் வழங்கிய வட்டாட்சியர் 

10 ஆம் வகுப்பு மாணவிக்கு ஓரே நாளில் கிடைத்த சான்றிதழ்கள்: பள்ளியில் மாணவியிடம் வழங்கிய வட்டாட்சியர் 
X
மாணவிக்கு சான்றிதழ்
பட்டுக்கோட்டை அருகே அரசு பள்ளியில், பத்தாம் வகுப்பு மாணவிக்கு ஓரே நாளில் சான்றிதழ்களை வழங்கிய வட்டாட்சியரை, மாவட்ட ஆட்சியர் பாராட்டினார். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே பழஞ்சூர் கிராமத்தை சேர்ந்த முருகன், வனரோஜா தம்பதியின் மகள் மேகலா (15). இவர் புதுக்கோட்டை உள்ளூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.  மேகலா சிறுவயதாக இருக்கும் போது பெற்றோர் இறந்த விட்டனர். தற்போது அவரது பாட்டி வடுவம்பாள் பராமரிப்பில் வளர்த்து வருகிறார். இந்நிலையில், மேகலாவுக்கான பிறப்பு சான்று, வருமான சான்று, சாதி சான்று, இருப்பிட சான்றுகள் சமர்ப்பிக்க வேண்டும் என பள்ளியில் கேட்டுள்ளனர். ஆனால், மாணவியிடம் அது போன்ற சான்றிதழ்கள் எதுவும் இல்லாத நிலையில், ஆசிரியர்களிடம் விபரத்தை கூறியுள்ளார். இந்நிலையில், புதன்கிழமை  மாலை 5.30 மணிக்கு  தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில், அரசு பள்ளி தலைமையாசிர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், புதுக்கோட்டை உள்ளூர் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சம்பந்தம், தனது பள்ளியில் படிக்கும் மாணவி மேகலாவின் நிலையை, ஆட்சியர் பிரியங்கா பங்கஜத்திடம், எடுத்துக் கூறி, சான்றிதழ்கள் வழங்க கோரிக்கை விடுத்தார். உனடியாக, பட்டுக்கோட்டை வட்டாட்சியர் தர்மேந்திராவிடம் பேசி, மாணவிக்கு தேவையான சான்றிதழ்களை வழங்குமாறு ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தினார். இதையடுத்து, வட்டாட்சியர் தர்மேந்திரா முயற்சியால், மாணவி மேகலாவுக்கு தேவையான வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, சாதிச் சான்று உள்ளிட்ட மாணவிக்கு தேவையான சான்றிதழ்கள் உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டு, மேகலாவின் பள்ளிக்கு சென்று, வட்டாட்சியர் தர்மேந்திரா வியாழக்கிழமை காலை 10 மணிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் சம்பந்தம் மற்றும் மாணவி மேகலா ஆகியோரிடம் வழங்கினார். உடனடியான முயற்சியை எடுத்து மாணவிக்கு உரிய சான்றிதழ்களை வழங்கிய வட்டாட்சியர் தர்மேந்திராவை, ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் பாராட்டினார். இது குறித்து வட்டாட்சியர் தர்மேந்திரா கூறியதாவது: பள்ளி மாணவி மேகலா, கடந்த 2010 ஆம் தஞ்சாவூர் மாவட்டம் சம்பைப்பட்டினம் கிராமத்தில் பிறந்தவர். எனவே அங்கு பிறப்பு பதியப்பட்டு உள்ளதா என ஆய்வு செய்து வருகிறோம். இல்லை என்றால், பதிவில்லா சான்று பெற்று ஒரு வார காலத்துக்குள் பிறப்பு சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மாணவியின் பெயரை, பாட்டி வடுவம்பாள் ரேஷன் கார்டில் இணைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்" இவ்வாறு அவர் கூறினார்.
Next Story