10 விவசாயிகளுக்கு ரூ.12 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்டம் காய்கனி பயிர்களில் உயர் சாகுபடி தொழில் நுட்பம், ஏற்றுமதி சந்தைப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பாக இரண்டு நாட்கள் நடைறெவுள்ள மாவட்ட அளவிலான விவசாயிகள் கருத்தரங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தொடங்கி வைத்து, 10 விவசாயிகளுக்கு ரூ.12 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பெரம்பலூர் மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் காய்கறி பயிர்களில் உயர் சாகுபடி தொழில் நுட்பம், மதிப்பு கூட்டல் மற்றும் ஏற்றுமதி சந்தைப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பாக இரண்டு நாட்கள் நடைறெவுள்ள மாவட்ட அளவிலான விவசாயிகள் கருத்தரங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மை கல்லூரி கூட்டரங்கில் இன்று (03.06.2025) தொடங்கி வைத்து, 10 விவசாயிகளுக்கு ரூ.12 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக தோட்டக்கலைத்துறையின் சார்பில், காய்கனி சாகுபடி, தொழில்நுட்பம், தோட்டக்கலைத்துறை மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டிருந்த சிறு கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்து, கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது ; மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு விவசாயிகளின் உற்பத்தியை இருமடங்காகவும் மற்றும் லாபத்தை மும்மடங்காகவும் அதிகரிக்கும் வகையில் தோட்டக்கலைத்துறை மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக காய்கனி சாகுபடி சந்தைப்படுத்துதல் தொடர்பான மாவட்ட அளவிலான விவசாய கருத்தரங்கு 03.06.2025 மற்றும் 04.06.2025 ஆகிய நாட்கள் நடைபெறவுள்ளது. இக்கருத்தரங்கின் மூலம் உயர் தொழில்நுட்ப காய்கனி சாகுபடி குறித்த செயல் விளக்கங்கள்விவசாயிகளுக்கு அளிக்கப்படவுள்ளது. இக்கருத்தரங்கை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளகேட்டுக் கொள்ளப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் பழங்கள், காய்கறிகள், சின்ன வெங்காயம் மற்றும் மரவள்ளி போன்ற தோட்டக்கலைப் பயிர்கள் சுமார் 12,800 எக்டரில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலேயே சின்ன வெங்காயம் சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் தேசிய தோட்டக்கலை இயக்கம் (NHM), தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் (NADP), தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் (NMEO), நுண்ணீர் பாசனம் (MI), தேசிய மூங்கில் இயக்கம் (NBM), மானாவாரி பகுதி மேம்பாட்டு (RAD), ஆகிய திட்டங்களில் ரூ.4,276.116 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 16,587 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டம் (SHDS) கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் (KAVIADP), பனை மேம்பாட்டு இயக்கம் (PDM) ஆகிய திட்டங்களில் ரூ.111.615 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 32,647 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். நடப்பு நிதியாண்டில் (2025-26) பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ.1288.262 நிதியில் தோட்டக்கலைத் துறையின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது. மேலும் தோட்டக்கலைப் பயிர் சாகுபடியில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளுக்கு உயர் தொழில்நுட்ப பயிற்சிகள், பட்டறிவு பயணங்களும் நடப்பு நிதியாண்டில் திட்டமிடப்பட்டுள்ளன. தற்சமயம் புவிசார் குறியீடு பெற்றுள்ள பிரசித்தி பெற்ற ஆலத்தூர் வட்டார செட்டிக்குளம் சின்ன வெங்காயம் உலகளாவிய சந்தையில் இடம்பெற்று விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட வழிவகை ஏற்பட்டுள்ளது. இக்கருத்தரங்கு காய்கனி பயிர்களில் உயிர் சாகுபடி தொழில்நுட்பம், மதிப்பு கூட்டல் மற்றும் காய்கறி பயிர்களில் குறிப்பாக வெங்காயம் ஏற்றுமதி சந்தைப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து வேளாண் மற்றும் தோட்டக்கலை விஞ்ஞானிகள் எடுத்துரைப்பார்கள். இதில் கலந்து கொண்டு அனைவரும் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இக்கருத்தரங்கில் திட்ட மானிய விபரங்கள், பண்ணைக் கருவிகளின் பயன்பாடு, தேனி வளர்ப்பு மற்றும் நுண்ணீர் பாசனம் குறித்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து விவசாயிகள் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு உயர்தொழில்நுட்ப முறைகளை பின்பற்றி தோட்டக்கலைப் பயிர்களை சாகுபடி செய்து தங்கள் வருமானத்தையும், வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார். இக்கருத்தரங்கில் தோட்டக்கலை துணை இயக்குநர் மு.சத்யா, வேளாண் இணை இயக்குநர் செ.பாபு, தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மைக் கல்லூரி முதல்வர் ஆர்.அருள்மொழியான், திருச்சி, தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய (மகளிர்) பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர்.ஆர்.ராஜேஸ்வரி, பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் வி.விக்னேஷ் பிரபு, திருச்சி, அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தொழில்நுட்ப வல்லுநர் எஸ்.கோகிலவாணி, ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய உதவி பேராசிரியர் செல்வி.எம்.ஹர்ஷினி, தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மைக் கல்லூரி, பெரம்பலூர், வேளாண் துணை இயக்குநர் திரு.எம்.கோவிந்தராசன், தோட்டக்கலை உதவி இயக்குநர் (ந.பொ) சு.செல்வபிரியா மற்றும் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்கள், தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், உதவி அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

