மர்ம விலங்கு கடித்து 10 ஆடுகள் உயிரிழப்பு!
வாணியம்பாடி அருகே மர்ம விலங்கு கடித்து 10 ஆடுகள் உயிரிழந்தன.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மர்மவிலங்கு கடித்து 10 ஆடுகள் உயிரிழந்ததால் கிராம மக்கள் அச்சம்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி பகுதியை சேர்ந்த சாவித்ரி. இவர் சொந்தமாக ஆடுகளை வளர்த்து வரும் நிலையில், நேற்று இரவு தனக்கு சொந்தமான ஆடுகளை வீட்டின் அருகே உள்ள ஆட்டு கொட்டகையில், கட்டி வைத்திருந்த நிலையில், நள்ளிரவில் சாவித்ரியின் ஆட்டு கொட்டகையில் புகுந்த மர்மவிலங்கு கொட்டகையில் இருந்த 10 ஆடுகளை கடித்து குதறி உள்ளது.
இதில் 10 ஆடுகள் உயிரிழந்த நிலையில், இன்று காலை ஆட்டு கொட்டகையிற்கு வந்த சாவித்ரி ஆடுகள் இறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் உயிரிழந்த ஆடுகளை கால்நடை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, மதனாஞ்சேரி பகுதியை சுற்றியுள்ள பகுதியில் ஆடுகளை கடித்த மர்ம விலங்கு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மதனாஞ்சேரி பகுதியில் ஒரு மாத காலமாக சுமார் 20க்கும் மேற்பட்ட ஆடுகள் மர்ம விலங்கு கடித்து உயிரிழந்ததால், ஆடுகளை கடித்தது, சிறுத்தையா? அல்லது செந்நாயா? அல்லது வேறேதேனும் விலங்கா என அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இதனால் வனத்துறையினர் அதிக அளவு மதனாஞ்சேரி பகுதியில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.