அதிமுக நிர்வாகி கொலையில் திமுக கவுன்சிலர் கணவர் உள்பட 10பேர் கைது

அதிமுக நிர்வாகி கொலையில் திமுக கவுன்சிலர் கணவர் உள்பட 10பேர் கைது

அதிமுக

அதிமுக நிர்வாகி கொலையில் திமுக கவுன்சிலர் கணவர் உள்பட 10பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம் தாதகாப்பட்டி காமராஜர் நகரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 62). கொண்டலாம்பட்டி பகுதி அ.தி.மு.க. செயலாளர். இவர், கொண்டலாம்பட்டி மண்டலகுழு முன்னாள் தலைவராகவும், அங்குள்ள கோவில் நிர்வாகியாகவும் இருந்துள்ளார். சண்முகம் நேற்று முன்தினம் இரவு கொண்டலாம்பட்டியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

வீட்டுக்கு 100 அடி தூரத்தில் வந்த போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர், சண்முகத்தின் மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். கண் இமைக்கும் நேரத்தில் 6 பேரும் சண்முகத்தை சுற்றி வளைத்தனர். என்ன நடக்கிறது என்பதை அவர் யூகிப்பதற்குள் அந்த கும்பல் சண்முகத்தை சரமாரியாக வெட்டியது. இதில் சண்முகத்தின் கழுத்து, தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் சரமாரி வெட்டு விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து போலீசார் அவரது உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது கொலையாளிகளை கைது செய்யும் வரை சண்முகம் உடலை வாங்க மாட்டோம் என்று அதிமுகவினர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் போராட்டம் மாலை வரை நீடித்தது. இந்த நிலையில் சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்த 55-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் தனலட்சுமியின் கணவர் சதீஷ்குமார் (44), நிலவாரப்பட்டியை சேர்ந்த அருண்குமார் (28), மூனாங்கரடு முருகன் (23), பூபதி (22), மணிமாறன் (33), தாதகாப்பட்டி சீனிவாச பெருமாள் (22), தாகூர் தெரு பாபு (45), தாதகாப்பட்டி அம்பாள் ஏரி ரோடு பகுதியை சேர்ந்த சந்தோஷ் (31), நவீன் (25), தாகூர் மாரியம்மன் கோவில் தெரு கவுதம் (33) ஆகிய 10 பேரை அன்னதானப்பட்டி போலீசார் நேற்று கைது செய்தனர். இதனால் சமாதானம் அடைந்த உறவினர்கள் இரவு 7.30 மணி அளவில் சண்முகம் உடலை வாங்கி சென்றனர். இதையடுத்து அரசு ஆஸ்பத்திரியில் குவிந்திருந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags

Next Story