கேரளாவிற்கு கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
10 டன் அரிசி பறிமுதல்
குமரி மாவட்டத்தில் இருந்து அண்டை மாநிலமான கேரளாவுக்கு அடிக்கடி ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அதிகாலையில் குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு லாரியில் ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுவதாக குமரி மாவட்ட உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து மதுரை மண்டல உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு விஜய கார்த்திக்ராஜ் உத்தரவின் பேரில் திருநெல்வேலி சரக உணவு கடத்தல் பிரிவு டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன் மேற்பார்வையில் கன்னியாகுமரி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு சப்- இன்ஸ்பெக்டர்கள், சிவஞானபாண்டியன்,துரை மற்றும் போலீசார் குமரி மாவட்ட எல்லையான களியக்காவிளை பகுதியில் நேற்று அதிகாலை வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை மடக்கி பிடித்து சோதனை நடத்தினார்கள் .அப்போது கேரளாவுக்கு அந்த லாரியில் 10 டன் ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அந்த 10 டன் ரேஷன் அரிசியை லாரியுடன் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக கேரள மாநிலம் நெய்யாற்றின்கரையை சேர்ந்த லாரி டிரைவர் ஆதர்ஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக ரேஷன் அரிசியை கடத்துவதற்கு பயன்படுத்தியலாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்