10 வயது சிறுமி வீட்டு வேலை: கணவன்-மனைவிக்கு சிறை
10 வயது சிறுமியை வீட்டில் வேலைக்கு வைத்திருந்த கணவன்-மனைவிக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
10 வயது சிறுமியை வீட்டில் வேலைக்கு வைத்திருந்த கணவன்-மனைவிக்கு தலா 3 ஆண்டு சிறை கும்போணம் காந்தி நகரை சேர்ந்தவர் மெகராஜ்பானு(வயது 48). இவருடைய கணவர் நசீர்(60). கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 25-ந் தேதி இவர்களுடைய வீட்டில் 10 வயது சிறுமியை வீட்டுவேலைக்காக அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக அப்போதைய மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சமூக பணியாளர் லலிதாவுக்கு குழந்தைகள் பாதுகாப்பு உதவி மையம் மூலம் தகவல் வந்தது. அதன்படி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சமூக பணியாளர் லலிதா, குழந்தை சேவை அமைப்பின் பணியாளர்கள் சுரேஷ், கேத்ரின் ராணி ஆகியோர் மேற்கு போலீசார் உதவியுடன் சம்பவ இடத்திற்கு சென்றனர். இங்கு வீட்டு வேலையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த சிறுமியை மீட்டு கணவன் மனைவி மற்றும் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் மெகராஜ் பானு, நசீர் ஆகியோர் சிறுமியை 2 ½ ஆண்டுகள் தங்கள் வீட்டில் வேலையில் ஈடுபடுத்தி வந்துள்ளனர். மேலும் அவர்கள் அந்த சிறுமியை காயப்படுத்தியதோடு, மனதளவில் துன்புறுத்தியதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மேற்கு போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்த வழக்கு கும்பகோணம் முதன்மை அமர்வு நீதிதுறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளவரசி நேற்று தீர்ப்பளித்தார் அதில் மெகராஜ் பானு மற்றும் அவருடைய கணவர் நசீர் ஆகிய 2 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
Next Story