100 நாள் வேலையில் அதிமுக கட்சி உறுப்பினர் சேர்க்கை பொதுமக்கள் அதிருப்தி
Sivagangai King 24x7 |24 Aug 2024 9:44 AM GMT
சிவகங்கை அருகே குமாரபட்டி ஊராட்சியில் 100 நாள் வேலை நடைபெறும் இடத்தில் அதிமுக நிர்வாகிகள் உறுப்பினர் சேர்க்கைக்கு சென்ற சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே குமாரபட்டி, காராம்போடை, சேந்தி உடையநாதபுரம், நல்லாகுளம் கிராமங்களை உள்ளடக்கியது குமாரபட்டி ஊராட்சி ஆகும். இவ்ஊராட்சியில் சுமார் 800 மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். ஒன்றிய அரசின் திட்டத்தில் ஒன்றான 100 நாள் வேலை மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று(ஆக.24) குமாரப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குமாரபட்டி கிராமத்தில் நடைபெற்ற 100 நாள் வேலையில் சுமார் 60க்கும் மேற்பட்டோர் வேலை செய்தனர். இந்நிலையில் அங்கு அதிமுக நிர்வாகிகள் உறுப்பினர் சேர்க்கைக்காக வந்த சம்பவம் சர்ச்சையை கிளப்பி உள்ளது ஒரு கிராமத்தில் கட்சிகள் சார்ந்த மற்றும் கட்சிகள் சாராத பொதுமக்கள் இருக்கும் பட்சத்தில் ஊராட்சியின் சார்பில் நடைபெறும் 100 நாள் வேலையில் ஊராட்சி மன்ற தலைவரின் துணையோடு அதிமுக உறுப்பினர் சேர்க்கை முயற்சி நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவி சூர்யகலாவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது தான் வெளியில் இருப்பதாகவும் விசாரணை செய்வதாகவும் தெரிவித்தார். இதுபோன்ற செயல்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story