100 சதவீத வாக்குப்பதிவே இலக்கு - ஆட்சியர் தர்ப்பகராஜ்

100 சதவீத வாக்குப்பதிவே இலக்கு - ஆட்சியர் தர்ப்பகராஜ்

செய்தியாளர் சந்திப்பு 

திருப்பத்துார் மாவட்டத்தில் 100 சதவீத ஓட்டுப்பதிவு என்பது இலக்காக உள்ளது என ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில் திருப்பத்துார் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளான திருப்பத்துார், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ஆகிய தொகுதிகளுக்கு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஓட்டு சாவடி மையங்களுக்கு மின்னணு ஓட்டு இயந்திரம் அனுப்பு வைக்கப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடியில் பணிபுரியும் அலுவலர்களும் அந்தந்த ஓட்டு சாவடிக்கு சென்று விட்டனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 1042 ஓட்டு சாவடிகளில் 4,305 ஓட்டு சாவடி அலுவலர்கள் பணியில் ஈடுபடுகின்றனர்.

அதுதவிர கூடுதலாக 859 ஓட்டு சாவடி அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர். திருப்பத்துார் மாவட்டத்தில் கண்டறியப்பட்ட பதற்றமான 106 ஓட்டு சாவடிகளில் துணை ராணுவத்தினர் அதிக அளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 1042 ஓட்டு சாவடிகளில் 65 சதவீத ஓட்டு சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறை மூலமாக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அனைத்து ஓட்டு சாவடிகளிலும், மாற்றுத்திறனாளிகளை கையாளுவதற்காக தன்னார்வலர்கள் அமர்த்தப்பட்டுள்ளன. குடிநீர் வசதி, மின்சார வசதி என அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் குறித்து தொடர்ந்து விழிப்புணர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. திருப்பத்துார் மாவட்டத்தில் 100 சதவீதம் ஓட்டு பதிவு என்பது இலக்காக உள்ளது.வாக்காளர்கள் தவறாமல் தங்களது ஓட்டை பதிவு செய்ய வேண்டும். திருப்பத்துார் மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.ஒரு கோடியே 53 லட்சத்து 64 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

எஸ்பி ஆல்பர்ட் ஜான் கூறுகையில், திருப்பத்துார் மாவட்டம் பொருத்தவரை தமிழக போலீஸ், ஆந்திர போலீஸ், துணை ராணுவம் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் என சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். திருப்பத்துார் மாவட்டத்தில் 16 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மாவட்ட ,மாநில எல்லைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் தகராறு செய்யும் நபர்கள்,ஏற்கனவே தேர்தல் தொடர்பாக வந்த புகார் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மேலும் கேமராக்கள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது எனவும் கூறினார்.

Tags

Next Story