தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் - ஆட்சியர் பிருந்தா தேவி
ஆட்சியர் பிருந்தாதேவி
மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 19ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றிட வேண்டும்.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி, தெரிவித்துள்ளதாவது: மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 19ந்தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 3,260 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
வாக்களிக்க வருகைதரும் வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி மையங்களில் போதிய குடிநீர் வசதிகள், கழிப்பறை வசதிகள், கோடைவெயில் தாக்கத்திலிருந்து பாதுகாக்க தற்காலிக நிழல் பந்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தால் குறிப்பிடப்பட்டுள்ள 13 ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணத்தை வாக்காளர்களுக்கான அடையாளச் சான்றாகக் கொண்டு வாக்களிக்கலாம். மேலும், பூத் சிலிப் இல்லாத வாக்காளர்களும் வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கலாம். மாவட்டத்தில் வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றிட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் கூறியுள்ளார்.