சாத்தூரில் 100%வாக்களிப்பு: மனித சங்கிலி ஊர்வலம்
மனித சங்கிலி ஊர்வலம்
தமிழகத்தில் வரும் ஏப்ரல் -19ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து நாள் தோறும் 100% வாக்குப்பதிவு மற்றும் நேர்மையான வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விதமான தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பேருந்து நிலையம் அருகில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தியும் மற்றும் என் வாக்கு விற்பனைக்கு அல்ல என்பதை வலியுறுத்தியும் கல்லூரியில் பயிலும் முதல் தலைமுறை வாக்காளர்கள் கலந்து கொண்ட தேர்தல் விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது. மேலும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட தேர்தல் விழிப்புணர்வு மனித சங்கலியை தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஜெயசீலன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
மேலும் இந்த மனித சங்கிலி பேருந்து நிலையம் முதல் மதுரை பேருந்து நிறுத்தம் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்றது.இந்த தேர்தல் விழிப்புணர்வு மனித சங்கிலியில் சுமார் 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.
மேலும் படந்தாலில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நாடாளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட உள்ள வாக்குச்சாவடி மையத்தை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது சாத்தூர் கோட்டாட்சியர் சிவக்குமார் மற்றும் சாத்தூர் தாசில்தார் லோகநாதன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்