10,008 பேருக்கு சக்தி அம்மா வஸ்திர தானம்
வஸ்திர தானம்
வேலூர் தங்க கோவில் பீடாதிபதி சக்தி அம்மாவின் 48வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு வஸ்திர தானம் வழங்கும் நிகழ்ச்சி ஸ்ரீபுரத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு சக்தி அம்மா தலைமை வகித்தார். அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் சக்தி அம்மா 10 ஆயிரத்து 8 பேருக்க வஸ்திர தானம் தந்தார். பின்னர் பக்தர்களுக்கு சக்தி அம்மா வழங்கிய அருளாசி வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய சக்தியமா , ஒரு பெண்ணுக்கு பிறந்த மற்றும் புகுந்த வீட்டில் தான் சேலை வழங்குவார்கள். அதனால், சக்தி அம்சமான உங்களுக்கு இங்கு நாராயணி பீடம் தாய் வீடாக மாறி சீர் கொடுக்கிறது. அரிசியில் இருந்து பல உணவுகளை உருவாக்கலாம். அதைப்போல தான் அம்பாளும். அவருக்கு நிறைய பெயர் உண்டு. நாராயணியும், மகாலட்சுமியும் ஒன்று தான். சக்தி எல்லாம் ஒன்று தான். மகாலட்சுமியை வணங்கினால் செல்வம் கிடைக்கும். மகாலட்சுமி என்று ஏன் பெயர் வந்தது?. எந்த குறையும் இல்லாமல் இருந்தால் அதை லட்சணமாக இருக்கிறது என்றும், அனைத்து அம்சங்களும் பொருந்திய ஒருவரை லட்சணமானவர் என்றும் அழைக்கிறோம்.
அப்படி அனைத்து வித அம்சங்களையும் கொண்டதால் அவளை மகாலட்சுமி என்று அழைக்கிறோம். அவளை வணங்கும் போது நம் வாழ்வில் எந்த குறையும் இருக்காது. அமைதி, ஆரோக்கியம், ஐஸ்வர்யம் கிடைக்கும். லட்சுமி அருள் கிடைக்க பக்தி வேண்டும். அது இருந்தால் தான் பரிபூரண அருள் கிடைக்கும். காலையில் எழுந்து குளித்து விளக்கு ஏற்ற வேண்டும், நாராயணி தாயே என்னைக் காப்பாற்று என்று வேண்டி, நெற்றியில் கும்குமம் அல்லது விபூதி அணிய வேண்டும்.
என்னுடைய வீட்டுக்கு வா என்று பரிபூரணமாக பிரார்த்தனை செய்ய வேண்டும். அப்போது ‘ஓம் நமோ நாராயணி’ என்று மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இது வெறும் வார்த்தையல்ல, இதற்கு பல சக்திகள் உண்டு. இதனால், பலருக்கு நோய், கஷ்டங்கள் தீர்ந்திருக்கிறது. 5 நிமிடம் குறைந்தது அந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். வெளிநாடுகளில் இருந்து டாக்டர்களும் இங்கு வந்து மந்திரம் கற்கிறார்கள். மருந்துடன், மந்திரத்தை சொல்லுவதால் அருளும், சக்தியும் கிடைக்கிறது’ என்றார். அதைத் தொடர்ந்து 10 ஆயிரத்து 8 பேருக்கு சக்தி அம்மா வஸ்திர தானம் வழங்கினார். நிகழ்ச்சியில் உள்நாடு மட்டுமல்ல வெளிநாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் பலரும் பெருமளவில் பங்கேற்றனர்.