"நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் 1,00,443 மாணாக்கர்கள் பயன்
கல்வி வளர்ச்சியிலும், மாணவர்களின் தனித்திறமைகளை வளர்ப்பதிலும், எதிர்காலத்தில் திறமை மிக்கவர்களாக உருவாக்குவதிலும், திறமைகளின் மூலம் சாதனையாளர்களாக வெற்றி பெறச் செய்வதிலும் மாணவ சமுதாயத்திற்கு மகத்தான திட்டங்களை செயல்படுத்துகிற தமிழ்நாடு முதலமைச்சரின் கனவுத் திட்டமே “நான் முதல்வன்” திட்டம் என்றால் அது மிகையல்ல. தமிழ்நாட்டின் மாணவ மாணவிகளின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு அதனை ஊக்குவிக்குகின்ற வகையில், நான் முதல்வன் என்கின்ற முதலமைச்சரின் கனவுத் திட்டத்தின் மூலம் 28 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு திறன் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூர் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் இத்திட்டத்தின் வாயிலாக 1,00,443 மாணாக்கர்கள் பயன் பெற்றுள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தினால் பயனடைந்த மாணவி டி.சிவபாரதி தெரிவித்ததாவது: "எனது தந்தை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை பார்க்கிறார். நான் தஞ்சாவூர் மாவட்டத்தில் வசித்து வருகிறேன். குந்தவை நாச்சியார் கல்லூரியில் இளங்கலை கணிதம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறேன். எனது கல்லூரியில் "நான் முதல்வன் திட்டத்தின்" கீழ் கணினி தொடர்புடைய பயிற்சிகளை (Microsoft Excel, Power point, Word, Outlook, Data Analytics in TABLEAU, Advanced Data Analytics using Python) கட்டணமில்லாமல் தரமான முறையில் பயின்றுள்ளேன். மேலும் "நான் முதல்வன் திட்டத்தின்" கீழ் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்று Goods Hands Management, under Teamlease என்ற நிறுவனத்தில் வேலை வாய்ப்பும் பெற்றுள்ளேன். ஆண்டு வருமானமாக ரூபாய். 1,80,000/- கிடைக்கிறது. சிறப்பான இத்திட்டத்தை வழங்கியுள்ள தமிழ்நாடு முதலமைச்சருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்தார். மாணவி ஆர்.தீபிகா தெரிவித்ததாவது.
"எனது தந்தை தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக வேலை செய்கிறார். நான் குந்தவை நாச்சியார் கல்லூரியில் இளங்கலை இயற்பியல் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறேன். எனது கல்லூரியில் "நான் முதல்வன் திட்டத்தின்" கீழ் கட்டணமில்லா பயிற்சிகளான Microsoft Office Essentials, Fundamentals of Data Analytics and Tableau by Training Partner Smart Bridge. Advanced Data Analytics using Python by Training Partner INGAGE போன்ற கணினி உயர் பயிற்சிகளை தரமான முறையில் பயின்றுள்ளேன். மேலும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்று Primary School Trainee @ Big Temple International School Thanjavur என்ற நிறுவனத்தில் வேலை வாய்ப்பும் பெற்றுள்ளேன்.
ஆண்டு வருமானமாக ரூ.2,04,000/- பெறுகிறேன். இத்திட்டத்தை வழங்கியுள்ள தமிழ்நாடு முதலமைச்சருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு “நான் முதல்வன்” திட்டம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.