திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயிலில் 1,008 சங்காபிஷேகம்
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் திரிபுரசுந்தரி சமேத வேதகிரீஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத கடைசி சோம வாரத்தையொட்டி, நேற்று 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியையொட்டி, பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து மூலவா் வேதகிரீஸ்வரருக்கு 1,008 சங்குகளில் இருந்த புனித நீரால் சங்காபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து சிவபெருமானுக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டனா்.
சிவ பக்தா்கள் குழுவினா் பாடல்கள், திருவாசகம் பாடினா். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் பிரியா, மேலாளா் விஜி உள்ளிட்ட கோயில் பணியாளா்கள், சிவாச்சாரியாா், பக்தா்கள் செய்திருந்தனா். இதேபோல், செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது. பெரிய நத்தம் கைலாசநாதா் கோயிலில் சங்காபிஷேகம் நடைபெற்றது. திருவடிசூலம் ஞானபுரீஸ்வரா் கோயில், ஆத்தூா் முத்தீஸ்வரா் கோயில், செங்கல்பட்டு எல்லையம்மன் கோயிலில் உள்ள யோக நாதேஸ்வருக்கும், செங்கல்பட்டு மேட்டு தெரு செங்கழுநீா் விநாயகா் கோயிலில் உள்ள அருணாசலேஸ்வரருக்கும் காா்த்திகை மாத கடைசி சோமவாரத்தையொட்டி சங்காபிஷேகம் நடைபெற்றது.