104 அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கிய எம்.பி கே.ஆர்.என்.இராஜேஸ்குமார்.

ஒரு நாடும், தேசமும் உயர்ந்து நிற்பதற்கு காரணம் “அறிவு, ஒழுக்கம், கட்டுப்பாடு” அதனை மாணவர்கள் கற்று கொள்ள வேண்டும். பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் மோகனூர் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 104 மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கி பேச்சு.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் மாவட்ட வருவாய் அலுவலர் மா.க.சரவணன் தலைமையில், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் முன்னிலையில் 104 மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 05.01.2026 சென்னையில் நடைபெற்ற “உலகம் உங்கள் கையில்” நிகழ்ச்சியில், அரசு கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு முதல் கட்டமாக 10 இலட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் ”உலகம் உங்கள் கையில் என்பது வெறும் தலைப்பு இல்லை”, ”எதிர்காலமே உங்கள் கையில் தான் இருக்கிறது” என்று உரையாற்றினார்கள். அதனைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் சட்டக் கல்லூரி அரங்கில் நடைபெற்ற விழாவில் அரசு கல்லூரி மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயிலும் 3201 மாணாக்கர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதற்கட்டமாக 1154 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.அந்த வகையில் இன்றைய தினம் மோகனூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் 104 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படுகிறது. இதில் அமைப்பியல் துறை -2, இயந்திரவியல் துறை -31, மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை -35, மின்னணு மற்றும் தொடர்பியல் துறை-13, கணினி பொறியியல் துறை-23 என மொத்தம் 96 மாணவர்கள் மற்றும் 08 மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படுகிறது.பாலிடெக்னிக் கல்லூரியில் படித்தவர்கள் தான் பெரிய விஞ்ஞானிகளாக உள்ளனர். இத்துறையில் நல்ல மதிப்பெண்கள் பெறும் பொழுது, பொறியியல் பயிலவும், முதுநிலை பட்டம் பயிலவும் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. மேலும் பல்வேறு போட்டித் தேர்வுகளிலும் வெற்றி பெறலாம். பாலிடெக்னிக்கை பொறுத்தவரை நல்ல விரிவுரையாளர்கள் உள்ளனர். எனவே அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் திறமையான ஆசிரியர்களும், பேராசிரியர்களும் பணியாற்றுகின்றனர்.மாணவ, மாணவியர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களது சந்தேகங்களை எவ்வித தயக்கமுமின்றி ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்து, உங்களை தெரிவுபடுத்திக் கொள்ள வேண்டும். எதிர்காலம் என்பது அறிவுசார்ந்த உலகமாக மாறப்போகிறது. அறிவியல் பல்வேறு துறைகளில் வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில், நன்றாக படிப்பதோடு, புதிய விசயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் பெறும் மடிக்கணினியின் மூலம் நாளை படிக்க போகும் பாடங்கள் குறித்து, முந்தைய தினமே அறிந்து கொண்டால், ஆசிரியர் நடத்தும் பொழுது உங்களுக்கு எளிதாக புரியும்.மாணவர்கள் உங்களது திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும். ஒரு நாடும், தேசமும் உயர்ந்து நிற்பதற்கு காரணம் “அறிவு, ஒழுக்கம், கட்டுப்பாடு”. இதை நீங்கள் கற்று கொள்ள வேண்டும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். இருப்பினும் கல்வியை உயர்த்த வேண்டும், மாணவர்கள், இதில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கில் தான் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திட்டங்கள் உள்ளது. அதில் ஒன்றுதான் இந்த மடிக்கணினி வழங்கும் திட்டம். மாணவர்கள் நாள்தோறும் புதிய தொழில்நுட்பங்களை இதன் மூலம் கற்றுக் கொள்ளுங்கள். மேலும் இ-நாளிதழ்களை பதிவிறக்கம் செய்து நாள்தோறும் படிக்க வேண்டும். இதனால் படிக்கின்ற ஆற்றல் பெருகுவதோடு, பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கும் நீங்கள் தயாராகலாம். உயர்கல்வி பயின்று உங்கள் வாழ்க்கையை முன்னேற்றிக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் துணை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் நவலடி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பெ.பிரபாகரன், முதலாமாண்டு துறைத்தலைவர் பி.குணசேகரன் உட்பட துறைச் சார்ந்த அலுவலர்கள், மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story