எஸ் எஸ் எல் சி பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது
பொதுத்தேர்வு
தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. அதன்படி சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் இந்த தேர்வு எழுதுவதற்காக 184 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் 22 ஆயிரத்து 160 மாணவர்கள், 21 ஆயிரத்து 317 மாணவிகள் என மொத்தம் 43 ஆயிரத்து 477 பேர் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வினை எழுத தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 895 மாற்றுத்திறனாளிகள் ஆவர். தேர்வு மையங்களுக்கு வந்த மாணவ, மாணவிகள் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து காலை 10 மணிக்கு வினாத்தாள் வழங்கப்பட்டது.
நேற்று நடந்த தமிழ் பாட தேர்வை 42 ஆயிரத்து 478 மாணவ, மாணவிகள் எழுதினர். 635 மாணவர்கள், 301 மாணவிகள் என 936 பேர் தமிழ் பாடத்தேர்வு எழுத வரவில்லை. அனைத்து மையங்களிலும் தேர்வுகள் முறையாக நடைபெறுவதை கண்காணிக்கும் வகையில் பறக்கும் படையினர், வழித்தட அலுவலர்கள், முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறை கண்காணிப்பாளர்கள், ஆசிரியரில்லா பணியாளர்கள் என 3 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பணியில் ஈடுபட்டனர்.
இதனிடையே, சேலம் மணக்காடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.