11கிலோ கஞ்சா பறிமுதல் ஒரு பெண் உட்பட நான்கு பேர் கைது.

குமாரபாளையத்தில் போலீசார் அதிரடி வேட்டையில் இரண்டு தரப்பினரிடமிருந்து 11 கிலோ கஞ்சா பறிமுதல். தலை மறைவான முக்கிய குற்றவாளிக்கு போலீஸ் வலைவீச்சு.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள கோட்டைமேடு பகுதியில் திருச்செங்கோடு மதுவிலக்கு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பொழுது, ஸ்கூட்டி வாகனத்தில் வந்த இருவர், போலீசாரைக் கண்டதும் இரண்டு சக்கர வாகனத்தினை திருப்பிச் செல்ல முற்பட்டனர். இதனைக் கண்ட மதுவிலக்கு உதவி காவல் ஆய்வாளர் சங்கீதா மற்றும் போலீசார் அவர்களை விரட்டி பிடித்தனர். வாகனத்தில் இருந்த மூட்டையை பிரித்துப் பார்த்த பொழுது, அதில் கஞ்சா 8 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், போலீசார் அவர்களை விசாரணை மேற்கொண்ட பொழுது, ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த பிரபல ரவுடி டேவிட் என்றும் அவரோடு வந்த பெண் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள ஓலப்பாளையம் பகுதியில் சேர்ந்த கௌரி என்பது இருவரும் கள்ள காதலர்கள் என்றும் தெரியவந்தது. பின்னர் அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன் அவர்கள் எங்கிருந்து கொண்டு வந்தார்கள் என விசாரித்த பொழுது, ஈரோடு ரயில்வே நிலையத்தில் வட மாநில இளைஞரிடம் இருந்து பெற்று குமாரபாளையத்தில் உள்ள விஜி என்பவருக்கு விற்பனை செய்ய வந்தது தெரிய வந்தது. வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், குமாரபாளையம் பகுதியில் தலைமறைவாக உள்ள, கஞ்சா வியாபாரி விஜய் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இதேபோல் குமாரபாளையம் போலீசார் குளத்துக்காடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபொழுது அங்கு இருவர் குடிபோதையில் தகராறு செய்து கொண்டு இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, அவர்கள் முன்னாள் குற்றவாளிகள் மிராண்டா செந்தில் மற்றும் மதி என்கிற மதியழகன் என்பது தெரிய வந்தது. அவர்களை, தீவிர விசாரணை செய்த பொழுது அவர்களிடம் இருந்து மூன்று கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா விற்பனையில் பெறப்பட்ட பணத்தை பிரித்துக் கொள்வதிலேயே இருவருக்கு தகராறு என்பது தெரியவந்தது. குமாரபாளையம் மதுவிலக்கு போலீசாரும், குமாரபாளையம் போலீசரும் தீவிர போதை ஒழிப்பு தேடுதல் வேட்டையில் இரு தரப்பினரிடம் இருந்து, 11 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, நான்கு பேர் கைது செய்யப்பட்டது பெரும் பரப்பரப்பினை ஏற்பட்டுள்ளது.
Next Story