11- வது தேசிய கைத்தறி தின விழாவில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையினை தொடங்கி வைத்த எம்.பி கே.ஆர்.என் ராஜேஷ் குமார்.

பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் 11- வது தேசிய கைத்தறி தின விழாவில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையினை தொடங்கி வைத்து, 50 நெசவாளர்களுக்கு ரூ.31.08 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நாமக்கல் மாநகராட்சி திருமண மண்டபத்தில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி, தலைமையில், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் , மாநகராட்சி மேயர் து.கலாநிதி ஆகியோர் முன்னிலையில், கைத்தறி துறையின் சார்பில் நடைபெற்ற 11வது தேசிய கைத்தறி தின விழாவில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையினை தொடங்கி வைத்து, 50 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.31.08 இலட்சம் மதிப்பிட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தேசிய கைத்தறி தினமானது, 1905-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ம் நாள் அன்று தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாக கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு அதன் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கைத்தறி தொழிலை மேம்படுத்தி, கைத்தறி நெசவாளர்களின் வருவாயை உயர்த்தவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் தேசிய கைத்தறி தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. கடந்த 2015 வருடம் முதல் ஆகஸ்ட் 7 ஆம் தேதி தேசிய கைத்தறி தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் 11-வது தேசிய கைத்தறி தினத்தினை சிறப்பிக்கும் விதமாக நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை சிறப்பாக நடைபெற்று வருகின்றது. பண்டைய காலத்தில் இருந்தே நமது வழக்கத்தில் ஒன்றாக இருப்பது கைத்தறி ஆகும். டாக்டர் கலைஞர் நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் மற்றும் ஓய்வூதிய திட்டத்தினை வழங்கினார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியத்தினை ரூ.1,000/-ல் இருந்து ரூ.1,200/-ஆக உயர்த்தி வழங்கி வருகிறார்கள். மேலும் விலையில்லா மின்சாரம் வழங்கும் திட்டத்தின் கீழ் கைத்தறி நெசவாளர்களுக்கு 200 அலகில் இருந்து 300 அலகாகவும், விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 அலகில் இருந்து 1000 அலகாகவும் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பினை வழங்கும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் வேட்டி, சேலை உற்பத்தி திட்டம், பள்ளி சீருடை வழங்கும் திட்டம் வழங்கப்பட்டு, இரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. திருச்செங்கோடு சரகத்திற்குட்பட்ட 48 கைத்தறி நெசவளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்ட கைத்தறி ஜவுளி இரகங்களான பட்டு சேலைகள், பருத்தி சேலைகள், பருத்தி வேஷ்டிகள், துண்டுகள், ஜமுக்காளம், பெட்ஷீட், காட்டன் மேட் போன்றவை 16 விற்பனை கூடங்களில் பொதுமக்கள் அறியும் வகையில் காட்சிபடுத்தப்பட்டு விற்பனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் இக்கண்காட்சியில் கோ-ஆப்டெக்ஸ் மற்றும் ஈரோடு சரகத்திற்குட்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் கலந்து கொண்டு தங்களது ஜவுளிகளை காட்சிப்படுத்தி விற்பனை மேற்கொள்ளப்படுகிறது. எனவே பொதுமக்கள் கைத்தறி நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்படும் இரகங்களை பயன்படுத்தி அவர்களுக்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சரகத்தில், 156 கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளது. இச்சங்கங்கள் மூலம் இராசிபுரம் பட்டு சேலைகள், பருத்தி சேலைகள், பருத்தி வேட்டிகள், வேட்டி வேலை வழங்கும் திட்டம், சீருடை திட்டம், கார்பெட், மேட், டவல் பெட்சீட், கிரே பீஸ், சால்வை போன்ற ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. கைத்தறி நெசவாளர்களுக்கு சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம், குடும்ப ஓய்வூதியம், முதியோர் ஓய்வூதியம், முத்ரா திட்டம், வீடுகள் கட்டும் திட்டம், விலையில்லா மின்சாரம், தள்ளுபடி மானியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, கைத்தறி நெசவாளர்கள் அரசின் அனைத்து திட்டங்களையும் முழுமையாக பயன்படுத்தி கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ள வாழ்த்துகிறேன் என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தெரிவித்தார்.தொடர்ந்து, இன்றைய தினம் முத்ரா கடன் திட்டத்தின் சார்பில் 33 நெசவாளர்களுக்கு ரூ.16.50 இலட்சம் கடனுதவி, சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 12 பயனாளிகளுக்கு ரூ.13.10 இலட்சம் மதிப்பிட்டில் நலத்திட்ட உதவிகளையும், கைத்தறி ஆதரவு திட்டத்தின் (HSP) கீழ் 5 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.1.47 இலட்சம் மதிப்பீட்டில் தறி உபகரணங்களும் என மொத்தம் 50 நெசவாளர்களுக்கு ரூ.31.08 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் செ.பூபதி, உதவி இயக்குநர் கைத்தறித்துறை அ.காமராஜ், கைத்தறி நெசவாளர்கள் சங்க தலைவர்கள், உறுப்பினர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story