கோவை: தொழிலதிபரிடம் 11 கோடி ரூபாய் மோசடி

கோவை: தொழிலதிபரிடம்  11 கோடி ரூபாய் மோசடி

கோப்பு படம்

கோவையில் இரிடியம் வாங்கி தருவதாக கூறி தொழிலதிபரிடம் ரூ.11 கோடி மோசடி செய்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் வயநாட்டை சேர்ந்த தொழிலதிபர் எம்.சிராஜூதீன் ( 44).இவரிடம் குனியமுத்தூரை சேர்ந்த பெரோஷ்கான் என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இரிடியம் வாங்கி தருவதாக கூறி சிராஜூதீனிடம் ரூ.11 கோடி பணத்தை பெற்றுக்கொண்டவர் இரிடியம் வாங்கி கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார்.

இதையடுத்து சிராஜூதீன் பெரோஷ்கானிடம் தனது பணத்தை திருப்பி தரும்படி பலமுறை கேட்டுள்ளார்.ஆனால் பெரோஷ்கான் பணத்தையும் கொடுக்காமல், இரிடியமும் வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிராஜூதின் கோவை குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.போலீஸ் விசாரணையால் அதிர்ச்சி அடைந்த பெரோஸ்கான் கேரள தொழிலதிபர் சிராஜூதீனிடம் சமாதானம் பேச சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அவர் முதற்கட்டமாக ரூ.50 லட்சம் கொடுப்பதாகவும் பின்னர் மீதி தொகையை தவணை முறையில் திருப்பி தருவதாக கூறியவர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை திரும்ப பெற வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார்.

இதனை சிராஜூதீன் ஏற்க மறுத்ததால் பெரோஸ்கான் நெல்லையை சேர்ந்த ராஜ் நாராயணன் (48) பொன் முருகானந்தம் என்கிற பொன்னுகுட்டி (56) ஆகியோரை அணுகி அவர்களிடம் ரூ.50 லட்சம் பணம் தருவதாகவும் அதனை பெற்றுக்கொண்டு கேரள தொழில் அதிபர் சிராஜூதீனை மிரட்டி காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவை திரும்ப பெற செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து ராஜ் நாராயணன்,பொன் முருகானந்தம் ஆகியோர் ஒரு காரில் கோவையில் உள்ள பெரோஸ்கான் வீட்டிற்கு வந்தவர்கள் முதற்கட்டமாக ரூ.20 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு காரில் சென்னையை நோக்கி பயணித்துள்ளனர்.

இதுகுறித்து மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் துணை ஆணையர் (தெற்கு) சரவணகுமார் மேற்பார்வையில் உதவி ஆணையர் அஜய் தங்கம் தலைமையில் போலீசார் குனியமுத்தூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது பணத்துடன் சென்னைக்கு செல்ல முயன்ற ராஜ் நாராயணன்,பொன் முருகானந்தம் மற்றும் கார் டிரைவர் பாலாஜி ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் பணம் அவர்கள் பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தலைமறைவாக உள்ள பெரோஸ்கானை போலீசார் தேடி வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன் வருமான வரித்துறையினர் பெரோஸ்கான் வீட்டில் சோதனை நடத்தி பணம் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story