பிளஸ்-2 தேர்வு எழுதிய 11 கைதிகள் தேர்ச்சி

பிளஸ்-2 தேர்வு எழுதிய 11 கைதிகள் தேர்ச்சி

பரிசு வழங்கிய சிறை சூப்பிரண்டு வினோத்

சேலம் மத்திய சிறையில் பிளஸ் 2 தேர்வெழுதிய 11 கைதிகளும் தேர்ச்சி பெற்றனர். முதல் 3 இடங்களை பிடித்த கைதிகளை பாராட்டி சிறை சூப்பிரண்டு வினோத் பரிசு வழங்கினார்.

சேலம் மத்திய சிறையில் கைதிகளுக்கு பல்வேறு மறுவாழ்வு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விருப்பம் உள்ள கைதிகளுக்கு சிறையில் கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. அதன்படி அடிப்படை கல்வி, 8, 10, 11 மற்றும் பிளஸ்-2 வகுப்புகள் சிறையில் உள்ள ஆசிரியர்கள் மூலம் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு திறந்த வெளிபல்கலைக்கழகம் மூலம் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு நடத்தப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ்-2 தேர்வில் சேலம் சிறையில் உள்ள தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என மொத்தம் 11 பேர் தேர்வு எழுதினர். அதில் தேர்வு எழுதிய 11 கைதிகளும் தேர்ச்சி பெற்றனர்.

அதன்படி கைதி ராமலிங்கம் 409 மதிப்பெண்கள் பெற்று முதல் இடம் பெற்று உள்ளார். 400 மதிப்பெண்கள் பெற்று கண்ணன் 2-ம் இடமும், 391 மதிப்பெண்கள் பெற்று வெங்கடேஷ் 3-ம் இடமும் பெற்று உள்ளார். கைதிகளில் முதல் 3 இடங்களை பெற்றவர்களுக்கு சிறை சூப்பிரண்டு (பொறுப்பு) வினோத் பேனா பரிசு வழங்கினார். சிறை ஆசிரியர்கள் ராஜ்மோகன்குமார், சுரேஷ், விஜயலட்சுமி ஆகியோருக்கு பதக்கம் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் மனோதத்துவ நிபுணர் வைஷ்ணவி, நல அலுவலர் அன்பழகன், துணை சிறை அலுவலர் சிவா, உதவி அலுவலர்கள் பாலமுரளி, செல்வேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story