சங்ககிரியில் 1141 தபால் வாக்குகள்
சங்ககிரி சட்டப்பேரவை தொகுதியில் 311 வாக்குச்சாவடி மையத்திற்குள்பட்ட 85 வயதை கடந்த 1223 பேர் தபால் வாக்கு செலுத்த விரும்பம் தெரிவித்ததையடுத்து தேர்தல் ஆணையத்தின் சார்பில் அவர்களது இல்லத்திற்கே சென்று தபால் வாக்குகளை பெறும் நடைமுறையை வெள்ளிக்கிழமை தொடங்கியது. அதனையடுத்து சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து 25 வாகனங்களில் போலீஸ் பாதுகாப்புடன் அவர்களிடம் தபால் வாக்குகளை பெறும் பணியில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டனர்.
முதல் நாளான வெள்ளிக்கிழமை 85வயதை கடந்தவர்களில் 410பேரும், மாற்றுத்திறனாளிகளில் 212 பேரும், சனிக்கிழமை 85 வயதை கடந்தவர்களில் 350, மாற்றுத்திறனாளிகள் 169 பேர் என இரு தினங்களில் மொத்தம் 1141 பேர் தபால் வாக்குகளை செலுத்தியுள்ளனர். மீதம் செலுத்தாதவர்கள் ஏப்.8ம் தேதி திங்கள்கிழமை மீண்டும் தபால் வாக்குகளை செலுத்த கடைசி நாளாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மகுடஞ்சாவடியை அடுத்த இடங்கணசாலை பிட் 1 கிராமம் இ.காட்டூர் பகுதியில் நாமக்கல் மக்களவை தொகுதி உதவி தேர்தல் அலுவலரும், சங்ககிரி வருவாய் கோட்டாட்சியருமான ந.லோகநாயகியும், தாரமங்கலம் அருகே உள்ள இடையப்பட்டி கிராமத்தில் சங்ககிரி வட்டாட்சியர் கே.அறிவுடைநம்பியும் தேர்தல் அலுவலர்களின் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.