ரூ.5.88 கோடி மதிப்பில் இலங்கை தமிழர்களுக்கு 117 வீடுகள்

விருதுநகர் மாவட்டம் ஆனைக்குட்டம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு ரூ.5.88 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 117 வீடுகளை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியம், ஆனைக்குட்டம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் , சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் ஆகியோர் முன்னிலையில், இலங்கை தமிழர்களுக்கு ரூ.5.88 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 117 குடியிருப்புகளை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் திறந்து வைத்து, குடியிருப்புகளுக்கான சாவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் பேசுகையில்: தமிழ்நாட்டில் மாவட்டங்களில் வசிக்கக்கூடிய இலங்கை தமிழர் முகாமில் இருக்கக்கூடிய குடிசை வீடுகளை மாற்றி நிரந்தரமான காங்கிரீட் குடியிருப்புகளாக மாற்றக்கூடிய திட்டத்தின் கீழ் நமது மாவட்டத்தில் மட்டும் சுமார் 700 வீடுகள் பல்வேறு கட்டங்களாக கட்டி முடிக்கப்பட்டு, ஏற்கனவே செவலூர் பகுதியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அவர்களால் 140 வீடுகள்குடியிருப்பு வீடுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன். இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் மக்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கும், அவர்களுடைய வாழ்க்கையை பாதுகாப்பானதாக அமைவதற்கும், இரண்டாவது கட்டமாக இன்று ஆனைக்கூட்டம் பகுதியில் ரூ.5.88 இலட்சம் மதிப்பீட்டில் 117 வீடுகள் கட்டப்பட்டு, ரூ.62.90 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர், சாலை வசதி பணிகளை செய்வதற்கான கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்தார்.

பின்னர் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:- இலங்கையில் இருந்து தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து தமிழகத்திற்கு வருகை தந்த இலங்கை தமிழின மக்களை அரவணைத்து தமிழகம் முழுவதும், 106 முகாம்களை அமைத்து அவர்களுக்கு தேவையான வசதிகளையும், பாதுகாப்பான சூழ்நிலைகளையும் உருவாக்கி தந்தவர் முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்கள். அந்த வழியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு அடிப்படை வசதிகள், பாதுகாப்பான கவுரவமான மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை அமைத்துத் தருவதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் , தமிழ்நாடு சட்டப் பேரவை விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், இலங்கைத் தமிழர்களது முகாம்களில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள வீடுகள் கட்டித் தரப்படும். முகாம்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். ஆண்டுதோறும் இலங்கைத் தமிழர் வாழ்க்கைத் தர மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பொறியியல்/வேளாண்/முதுநிலை பட்டப்படிப்பு மாணவ, மாணவியருக்கு கல்வி மற்றும் விடுதிக் கட்டணம் வழங்குதல், வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி, சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி மற்றும் சமுதாய முதலீட்டு நிதி, மாதாந்திர பணக்கொடை உயர்வு, இலங்கைத் தமிழர்களுக்கு விலையில்லாமல் அரிசி, விலையில்லா எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும் என பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.

அதன்படி, தமிழகத்தில் உள்ள 106 முகாம்களில் உள்ள 7,469 வீடுகளிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், முதற்கட்டமாக 3,510 வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டது. அதற்காக சுமார் ரூ.300 கோடிக்கும் மேலான நிதி ஒதுக்கீடு செய்து, வீடுகள் கட்டும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, இந்தத்திட்டம் பல்வேறு மாவட்டங்களில், அந்தந்த மாவட்ட அமைச்சர்களால் தொடங்கி வைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஆணைக்குட்டம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 124 குடும்பங்களில் 179 ஆண்கள், 170 பெண்கள் என மொத்தம் 349 நபர்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு ரூ.5.88 கோடி மதிப்பில் 117 குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆணைக்குட்டம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.19.60 இலட்சம் மதிப்பில் கம்பி வேலியுடன் கூடிய சுற்றுச்சுவர், ரூ.19.50 இலட்சம் மதிப்பில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, ரூ.9.60 இலட்சம் மதிப்பில் பணிக்கூடம், ரூ.9.55 இலட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை, ரூ.4.65 இலட்சம் மதிப்பில் தனிநபர் குடிநீர் இணைப்பு பணிகள் என மொத்தம் ரூ.62.90 இலட்சம் மதிப்பில் அடிப்படை வசதிக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்தார். இலங்கைத்தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும் தொடர்ச்சியான பல்வேறு உதவிகள் செய்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசிற்கு இலங்கைத்தமிழர்கள் நன்றியினை தெரிவித்தனர்.

மேலும், ஆணைக்குட்டம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமின் சங்கத்தலைவர் பொது சுகாதார வளாகம் மற்றும் குளியலறை தொட்டி கட்டித்தர வேண்டி சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சரிடம் அளித்த கோரிக்கைக்கு, மாவட்ட நிர்வாகம் மூலம் செய்து தரப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் உறுதியளித்தார்.

Tags

Next Story