11ம் வகுப்பு மாணவிக்கு திருமணம் – பெற்றோர் மீது வழக்குபதிவு
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சியில் வசித்து வரும் 16 வயது மாணவி,இவர் சிவகாசியில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.இந்த நிலையில் சிறுமியின் உறவினர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் அடிக்கடி மாணவியின் வீட்டிற்கு வந்த போது சிறுமிக்கும்,வாலிபர் சுரேசுக்கும் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி சிறுமியின் வீட்டில் வைத்து சிறுமியின் பெற்றோர் முன்னிலையில் ரகசிய திருமணம் நடந்துள்ளது. பின்னர் சிறுமியும், வாலிபர் சுரேசும் திருநெல்வேலி சென்று விட்டனர்.பின்னர் அங்கிருந்து மும்பை சென்றுள்ளனர்.இந்த நிலையில் சிறுமி,1098 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு 11ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் திடீரென திருமணம் நடந்து விட்டதாகவும், தனக்கு தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.
இந்த புகார் குறித்து சிவகாசி ஊரட்சி ஒன்றிய ஊர்நல அலுவலர் மேரிராசாத்தி பாதிக்கப் பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினார். அதனை தொடர்ந்து சிவகாசி அனைத்து மகளிர் போலீசில் புகார் தெரிவித்தார்.அந்த புகாரின் பேரில் வாலிபர் சுரேஷ், சிறுமியின் பெற்றோர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.