மச்சபுரீஸ்வரர் கோவில் அருகே 12 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு

பாபநாசம் அருகே கண்டெடுக்கப்பட்ட 12 ஐம்பொன் சிலைகள் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் பாபநாசம் அருகே கோவில் தேவராயன் பேட்டை கிராமத்தில் மச்சபுரீஸ்வரர் கோயில் உள்ளது. கோயில் அருகே முகமது பைசல்,சைனி மோல் என்பவர்களுக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்ட பள்ளம் தோன்றிய போது முதலில் ஒரு ஐம்பொன் சிலை கிடைத்தது. அதனை தொடர்ந்து மேலும் பள்ளம் தோண்டும் போது அடுத்தடுத்து சுவாமி சிலைகள் கிடைத்தது.

இந்த தகவலை பண்டாரவாடை கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் உடனடியாக பாபநாசம் வட்டாட்சியர் மணிகண்டனுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்டாட்சியர் மணிகண்டன் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா அந்தப் பகுதிகளை முழுவதும் தோண்ட உத்தரவிட்டனர் அதனைத் தொடர்ந்து அந்த பள்ளம் ஜேசிபி இயந்திரம் உதவியோடு தோண்டப்பட்டது. அப்போது கோவில் பொறுப்பு செயல் அலுவலர் சிவராஜன் ,பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன், வருவாய் ஆய்வாளர் சுந்தரேசன் ,கோயில் ஆய்வாளர் லெட்சுமி பண்டாரவாடை ஊராட்சி மன்ற தலைவர் மரியம்பீவி மகரூப்,ஒன்றிய கவுன்சிலர் மணிமொழி தமிழ்வாணன், கும்பகோணம் சிலை தடுப்பு பிரிவு தலைமை காவலர்கள் கோபால், சுரேஷ் மற்றும் கிராமவாசிகள் ஆகியோர் முன்னிலையில் தோண்டிய போது சோமாஸ்கந்தர், நடன திருஞானசம்பந்தர், பிரதோஷ நாயக்கர் , மாணிக்கவாசகர், சண்டிகேஸ்வரர், சிவகாமி அம்பாள், கல்யாண சுந்தரேஸ்வரர், தனி அம்மன் பீடத்துடன் சிலை, பிரதோஷ நாயக்கர் திருவாச்சி, திருநாவுக்கரசர், விநாயகர் உள்ளிட்ட 12 சுவாமி சிலைகளும் பூஜைப் பொருட்கள் உட்பட 20 பொருட்கள் கிடைத்தன.

தகவல் பரவியதும் அக்கம்பக்கத்து கிராமத்தினர் கோவில் தேவராயன் பேட்டை கிராமத்தில் குவிந்ததால் பரபரப்பு நிலவியது. கிடைத்த 12 சிலைகள் மற்றும் பூஜை பொருட்களை பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story