இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 12 ஆயிரம் பேருக்கு சிகிச்சை

X
ஆட்சியர் பிருந்தா தேவி
சேலம் மாவட்டத்தில் ‘இன்னுயிர் காப்போம்- நம்மை காக்கும் 48' திட்டத்தின் கீழ் ரூ.14 கோடியே 68 லட்சம் செலவில் சாலை விபத்தில் காயமடைந்த 12 ஆயிரத்து 305 பேருக்கு சிகிச்சை வழங்கப்பட்டதாக ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
கலெக்டர் டாக்டர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சாலை விபத்தினால் ஏற்படும் உயிர் இழப்பை குறைக்க, விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரத்திற்குள் கட்டணமில்லா உயிர் காக்கும் அவசர சிகிச்சைக்கான நம்மை காக்கும் 48 திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. ‘இன்னுயிர் காப்போம் - நம்மைகாக்கும் 48' என்ற திட்டத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்படும் மருத்துவமனையிலேயே முதல் 48 மணி நேரம் வரை அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறைகளில் உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளியாக இல்லாமல் இருந்தாலும், நோயாளி மேற்கொள்ளும் சிகிச்சை காப்பீட்டு திட்டத்தில் இல்லை என்றாலும் அவர்களை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றி கட்டணம் இல்லாமல் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் சாலை விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்கள் ‘இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48' என்ற திட்டத்தின் மூலம் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஆத்தூர், ஓமலூர், சங்ககிரி, எடப்பாடி, வாழப்பாடி அரசு ஆஸ்பத்திரிகள், மேட்டூர் தலைமை அரசு மருத்துவமனை மற்றும் 21 தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சை பெறலாம். சேலம் மாவட்டத்தில் ‘இன்னுயிர் காப்போம்- நம்மை காக்கும் 48' திட்டத்தின் கீழ் ரூ.14 கோடியே 68 லட்சம் செலவில் சாலை விபத்தில் காயமடைந்த 12 ஆயிரத்து 305 பேருக்கு சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Next Story
