1,243 பயனாளிகளுக்கு ரூ.29 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகள்

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ்
பெரம்பலூர் மாவட்டம் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் பல்வேறு துறைகளின் கீழ் 1,243 பயனாளிகளுக்கு ரூ.29 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , பிரகாஷ் அம்பேத்கர் முன்னிலையில், டாக்டர்.அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135வது பிறந்த நாளை முன்னிட்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் புதிய விடுதி, பள்ளிக் கட்டடங்கள், சமுதாயக் கூடங்கள், கற்றல் கற்பித்தல் அறைகள், 1000 பழங்குடியினர் வீடுகள், ஆகியவற்றை திறந்து வைத்து, 49,542 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை இன்று (14.04.2025) சென்னை, கலைவாணர் அரங்கில் வழங்கினார்கள், இந்நிகழ்ச்சியை பயனாளிகள் காணும் வகையில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டதை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் , பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் ஆகியோர் பயனாளிகளுடன் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கூட்டரங்கில் அமர்ந்து பார்வையிட்டனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும், சமத்துவ நாள் விழாவாக கடைப்பிடிக்க ஆணையிட்டுள்ளார்கள். அவ்வாறாக பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் உள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் பல்வேறு சிறப்பு திட்டங்களின் கீழ் தமிழக அரசின் அனைத்து துறைகளின் வாயிலாக அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட அறிவுறுத்தியுள்ளார்கள். அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கூட்ட அரங்கில் சமத்துவ நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் 09 பயனாளிகளுக்கு ரூ.24.5 லட்சம் மதிப்பீட்டில் தீருதவித்தொகை, கல்வி உதவித்தொகையும், தாட்கோ மூலமாக 10 பயனாளிகளுக்கு ரூ.25.36 லட்சம் மதிப்பீட்டில் நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தில் நிலம் வாங்குவதற்கும், தொழில் முனைவோர் உதவித்தெகையும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 385 பயனாளிகளுக்கு ரூ.385 லட்சம் மதிப்பீட்டில் இணையவழி வீட்டுமனைப்பட்டாவிற்கான ஆணைகளையும், மகளிர் திட்டம் சார்பில் 78 பயனாளிகளுக்கு ரூ.195.7 லட்சம் மதிப்பீட்டில் அமுத சுரபி கடன், ஒருங்கிணைந்த பண்ணைத்தொகுப்பு கடன் மற்றும் வங்கி கடனுதவிகளுக்கான ஆணைகளையும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 21 பயனாளிகளுக்கு ரூ.9.95 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்புக்கடன், கிசான் கடன் அட்டைகளையும், வேளாண்மைத்துறையின் சார்பில் 03 பயனாளிகளுக்கு ரூ.1.57 லட்சம் மதிப்பீட்டில் வேளாண் இடுபொருட்களையும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 06 பயனாளிகளுக்கு ரூ.8.63 லட்சம் மதிப்பீட்டில் வெங்காய கொட்டகை அமைப்பதற்கான ஆணைகளையும், வேளாண் பொறியியல்துறை சார்பில் 05 பயனாளிகளுக்கு ரூ.9.30 லட்சம் மதிப்பீட்டில் வேளாண் இயந்திரங்களையும், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 03 பயனாளிகளுக்கு ரூ.03 லட்சம் மதிப்பீட்டில் கறவை மாடு கடனுதவிகளையும், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் 31 பயனாளிகளுக்கு ரூ.1.60 லட்சம் மதிப்பீட்டில் கல்வி உதவித்தொகை மற்றும் திருமண நிதியுதவித்தொகையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 02 பயனாளிகளுக்கு ரூ.1.10 லட்சம் மதிப்பீட்டில் திருமண நிதியுதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கமும், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் 680 பயனாளிகளுக்கு ரூ.2,226 லட்சம் மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்லம் மற்றும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணைகளையும், நகராட்சி சார்பில் 05 தூய்மை பணியாளர்களுக்கு சீருடை மற்றும் பணிப்பாதுகாப்பு உபகரணங்களும், 05 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகளையும் என பல்வேறு துறைகளின் சார்பில் 1,243 பயனாளிகளுக்கு ரூ.2,891.71 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைகழக கூட்டரங்கில் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. அந்த நோக்கத்தில்,ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு அரியவகை திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இத்திட்டங்களை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்கள் பயன்படுத்தி பொருளாதார மேம்பாடு அடைய வேண்டும். அரசு நலத்திட்ட உதவிகளை தகுதியான பயனாளிகளை கண்டறிந்து வழங்கிட வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் நலத்திட்ட உதவிகள் பெறவந்த பயனாளிகளுக்கு உணவு, குடிநீர் வசதியும், வாகனங்களில் பாதுகாப்பாக அழைத்துச்செல்லவும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வி.வாசுதேவன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ச.வைத்தியநாதன், தாட்கோ பொது மேலாளர் கவியரசு, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பாண்டியன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரெ.சுரேஷ்குமார், ஆட்மா தலைவர் ஜெகதீசன், தனி வட்டாட்சியர் மு.சுகுணா, முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story