127வது மலர் கண்காட்சிக்காக தயாராகி வரும் உதகை அரசு தாவரவியல் பூங்கா...
127வது மலர் கண்காட்சிக்காக தயாராகி வரும் உதகை அரசு தாவரவியல் பூங்கா... மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம். இச்சமயங்களில் இங்கு நிலவும் இதமான காலநிலையை கண்டு ரசிக்க அண்டை மாநிலங்களான கேரளா கர்நாடகா ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகளை கவர ஆண்டு தோறும் தோட்டக்கலைத்துறை, சுற்றுலாத்துறை, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கோடை விழாக்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டு மே மாதம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 16ம் தேதி துவங்கும் 127 வது மலர் கண்காட்சி ஆறு நாட்கள் நடைபெற உள்ளன. மலர் கண்காட்சிக்காக உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகை, பெரணி இல்லம், பூங்காவில் உள்ள புல்வெளி மைதானங்கள் சீரமைக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த ஆண்டு நடைபெறும் மலர் கண்காட்சிக்காக வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 15 ஆயிரம் மலர் தொட்டிகளில் பல்வேறு வண்ண வண்ண மலர்களை பராமரிக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டு நடைபெறும் மலர்கள் கட்சியை காண வரும் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்து படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story



