'ஐஷர்' வேனில் 12டி தியேட்டர் வடிவமைப்பு
சுற்றுலா பயணிகளை கவர பழைய 'ஐஷர்' வேன் வாகனத்தில் 12டி தியேட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம்,மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால சிற்பங்களை காண, சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதியினர் அதிக அளவில் வருகின்றனர். வெளிநாட்டுப் பயணியரின் வருகையும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இங்கு, அவர்களுக்கு சிற்பங்கள் தவிர்த்து, பிற பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லை. இந்நிலையில், தனியார் சார்பில், வாகன 12டி தியேட்டர், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பழைய 'ஐஷர்' வேன் வாகனத்தில், திரை, ஒன்பது இருக்கைகள், பல வகை சாகச படங்கள் திரையிடும் டிஜிட்டல் கணினி, ஜெனரேட்டர் ஆகிய வசதிகளுடன், 12டி தியேட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
திரையில் ஒளிபரப்பாகும் பல்வேறு சாகச நிகழ்வை, 12டி கண்ணாடி வாயிலாக, நாம் கண்டு, அந்நிகழ்வுடன் நிஜத்தில் பயணிக்கும் அனுபவத்தை உணரலாம். சாகசத்திற்கேற்ப, நாம் அமர்ந்துள்ள 'ஹைட்ராலிக்' தொழில்நுட்ப இருக்கைகள் பிரத்யேக ஒலியுடன் சாய்ந்தும், உயர்ந்தும் காட்சியின் தீவிரத்தை உணர்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
இது குறித்து, மாமல்லபுரத்தைச் சேர்ந்த பங்குதாரர்கள், பழனி மற்றும் ராஜேஷ் கூறியதாவது: இதுபோன்ற வாகன 12டி தியேட்டர், மும்பை போன்ற இடங்களில் தான் உள்ளது. சென்னையில் தீவுத்திடலில், இதனை ஒருமுறை கவனித்த நாங்கள், மாமல்லபுரத்திலும் துவக்க விரும்பினோம். அதற்காக பழைய வாகனத்தை வாங்கி, தியேட்டராக மேம்படுத்தியுள்ளோம். இங்கு, 30 திகில் அனுபவ காட்சிப் படங்கள் உள்ளன. 10 நிமிட காட்சிக்கு, நபருக்கு 100 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.