தூத்துக்குடியில் சூதாடிய 13 பேர் கைது : ரூ.1 லட்சம், 7 பைக் பறிமுதல்
பைல் படம்
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி., பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் கடத்தலை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தூத்துக்குடி அருகே உள்ள துப்பாஸ்பட்டி காட்டுப்பகுதியில் வைத்து சிலர் பணம் வைத்து சூதாடிக் கொண்டு இருந்தனர். உடனடியாக போலீசார் அந்த பகுதியை சுற்றிவளைத்தனர்.
அங்கு சூதாடிக் கொண்டிருந்த தூத்துக்குடியை சேர்ந்த ஆதிலிங்கம் (43), தங்கராஜ் (34), ஜான்சன் (51), சத்யராஜ் (24), பாலமுருகன் (40), ராஜன் (50), ஆதிஆனந்தலிங்கம் (20), சந்தன முனீசுவரன் (25), திருமணி (39), தீபக் (33), சாலமோன் (55), ரவி (25), வசந்தலிங்கதுரை (19) ஆகிய 13 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 லட்சத்து 3 ஆயிரத்து 410 ரொக்கப்பணம், 15 செல்போன்கள், 7 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.