காஞ்சியில் 13.3 லட்சம் வாக்காளர்கள் - புதிதாக 32,000 பேர் சேர்ப்பு

காஞ்சியில் 13.3 லட்சம் வாக்காளர்கள் -  புதிதாக 32,000 பேர் சேர்ப்பு

வாக்காளர் பட்டியல் வெளியீடு 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல், வெளியிடப்பட்டதில், 4 சட்டசபை தொகுதிகளில், 13.3 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். புதிதாக 32,000 வாக்காளர்கள் பட்டியலில் சேர்ந்துள்ளனர். ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்களே அதிகமாக இடம் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் கடந்தாண்டு அக்டோபர் 27ல், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டன. அதைத் தொடர்ந்து, மாவட்டம் முழுதும் 1,398 ஓட்டுச்சாவடிகளில், நவம்பர் மாதம் 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடந்தன. இதில், பெயர் சேர்க்க, 30,000த்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் விண்ணப்பம் அளித்திருந்தனர். மேலும், நீக்கல், திருத்தம் உள்ளிட்டவைக்கும் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் விண்ணப்பம் அளித்தனர். கூர்ந்தாய்வு அவற்றை ஓட்டுச்சாவடிநிலை அலுவலர்கள் வாயிலாக, நேரடியாக கூர்ந்தாய்வு செய்து வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து, தமிழகம் முழுதும் அனைத்து மாவட்டங்களிலும், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்டத்தில், கலெக்டர் வளாகத்தில், மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். முதல் பிரதியை மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் பெற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., - காங்., - கம்யூ., என அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர், காஞ்சிபுரம் என, நான்கு சட்டசபை தொகுதிகளிலும், 6 லட்சத்து 48,934 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து, 84,430 பெண் வாக்காளர்கள், 183 மூன்றாம் பாலினத்தவர்கள் என, 13 லட்சத்து 33,547 வாக்காளர்கள் இருப்பது தெரியவந்துள்ளது."

"லோக்சபா தேர்தலை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலை, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில், வாக்காளர்கள் பார்வையிடலாம். லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்பு வரும் வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்டவைக்கு, ஆன்லைன் அல்லது தாலுகா அலுவலகங்களில், வாக்காளர்கள் தொடர்ந்து மனு அளிக்கலாம் என, தேர்தல்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளில், அதிகபட்சமாக ஆண்களில், ஆலந்துாரில் 1,88,371 வாக்காளர்களும், பெண்களில், ஸ்ரீபெரும்புதுாரில் 1,93,452 வாக்காளர்களும் உள்ளனர். குறைந்தபட்சமாக ஆண்களில், உத்திரமேரூரில் 1,28,070 வாக்காளர்களும். பெண்களில், உத்திரமேரூரில் 1,37,839 வாக்காளர்களும் உள்ளனர். மூன்றாம் பாலினத்தில், ஸ்ரீபெரும்புதுாரில் 62 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக காஞ்சிபுரத்தில் 21 வாக்காளர்களும் உள்ளனர். 32,000 புதிய வாக்காளர்கள் தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிதாக சேர்ந்த 32,000 வாக்காளர்களில், 12,000 வாக்காளர்களுக்கு, கடந்த வாரம் புதிய வாக்காளர் அட்டை தபால் மூலம் அனுப்பியிருக்கிறோம். இப்போது, 11,000 பேருக்கு வாக்காளர் அட்டை எங்களுக்கு வந்துள்ளது. ஒரு சில நாட்களில், இந்த 11,000 அட்டையும் சென்றடையும். மீதமுள்ள வாக்காளர்களுக்கும், ஒரு வாரத்திற்குள் அனுப்பி விடுவோம். வாக்காளர் அட்டை தபால் வாயிலாக பெறாத வாக்காளர்கள், அந்தந்த தாலுகா அலுவலகங்களில் அடுத்த வாரம் பெற்றுக் கொள்ளலாம்."

Tags

Next Story