ரூ.1.36 கோடி மோசடி; இருவர் கைது
பைல் படம்
பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்தவர் கார்த்திக், 41; ஐ.டி., ஊழியர். இவர், முகநுாலில் வந்த 'டிரேடிங்' தொடர்பான விளம்பரத்திற்கு 'லைக்' கொடுத்துள்ளார். தொடர்ந்து, கடந்த மாதம் 11ம் தேதி, இவரது வாட்ஸாப் எண்ணிற்கு,'ஆன்லைன் டிரேடிங்' குறித்த 'லிங்க்' ஒன்று வந்துள்ளது. அந்த 'லிங்கை' திறந்து, 'டிரேடிங்' தொடர்பான விபரங்களை பார்த்த பின், 4 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். அதிலிருந்து 36,000 பணத்தை கமிஷனாக திரும்ப எடுத்துள்ளார். இதையடுத்து, 300 சதவீதம் கமிஷன் கிடைக்குமென மர்ம கும்பல் ஆசை காட்டியதால், அவர்கள் கூறிய 'இன்ட்ரா டே, பிளாக் டிரேட் உள்ளிட்ட செயலிகளில் இணைந்துள்ளார்.
அதற்கு, கமிஷன் தொகையான 27 லட்சம் ரூபாயை முன்கூட்டியே செலுத்த வேண்டுமென, மர்ம நபர்கள் கூறியுள்ளனர். இல்லாவிட்டால், ஏற்கனவே செலுத்திய பணமும் கிடைக்காது எனக் கூறியுள்ளனர். அதன்படி, 27.96 லட்சம் ரூபாயை, வங்கி வாயிலாக அவர்கள் கூறிய கணக்கிற்கு செலுத்தியுள்ளார்.
மேலும், மர்ம நபர்கள் கொடுத்த பல்வேறு வங்கி கணக்கிற்கு பல தவணைகளில், 1.36 கோடி ரூபாய் செலுத்தி, பணத்தை இழந்துள்ளார். இது குறித்த புகாரை விசாரித்த மத்திய சைபர் கிரைம் போலீசார், சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த ரமேஷ்குமார், 38, ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அருண், 30, ஆகியோரை நேற்று கைது செய்தனர். தலைமறைவான மற்றவர்களை தேடி வருகின்றனர்.