கடத்தி வரப்பட்ட 1,360 மதுபாட்டில்கள் பறிமுதல்: மூவர் கைது

கடத்தி வரப்பட்ட 1,360 மதுபாட்டில்கள் பறிமுதல்: மூவர் கைது
பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்
தஞ்சாவூர் மாவட்டத்தில் மதுபானம் விலை உயர்வு அறிவிப்பால், கள்ளச் சந்தையில் விற்க கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே கூடநாணல் பகுதியில், திருக்காட்டுப்பள்ளி காவல் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்துக்கு இடமாக ஒரு டாடா சுமோ கார் ஒன்று அங்கு நின்று கொண்டிருந்தது. அந்த வாகனத்தின் அருகே காவல்துறையினர் சென்ற போது, வாகனத்தில் இருந்து ஒருவர் தப்பியோடினார். அப்போது தப்பியோட முயன்ற மற்ற மூவரை மடக்கிப் பிடித்தனர். மேலும், வாகனத்தை சோதனை செய்த போது, அதில், 1,360 பிராந்தி பாட்டில்கள் எவ்வித உரிமமும் இன்றியும், அரசு அனுமதியின்றியும் விற்பனைக்காக திருச்சி பகுதிகளில் இருந்து ஏற்றி வந்தது தெரிந்தது.

இதையடுத்து பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. திருக்காட்டுப்பள்ளி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மூவரையும் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், திருவையாறு அருகே மேலதிருப்பந்துருத்தியை சேர்ந்த அன்புச்செல்வன் மகன் லோகேஸ்வரன் (27), குணசீலன் மகன் பாலமுருகன் (27), நடுக்காவேரி மேலத் தெருவை சேர்ந்த கலியராஜ் மகன் வெற்றிச்செல்வன் (43), எனவும், தப்பியோடியது நடுக்காவேரிவை சேர்ந்த காளிராஜ் மகன் வேல்முருகன் (42) என்பதும் தெரியவந்தது.

தமிழகத்தில் இன்று (பிப்.01 ம் தேதி) டாஸ்மாக்கில் மதுபானங்களின் விலையை உயர்த்துவதாக அரசு அறிவிக்கப்பட்டதால், கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதற்காக, மதுபாட்டில்களை கடத்தி வரப்பட்டதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்த மதுபாட்டில்களை ஆட்சியர் தீபக் ஜேக்கப், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், திருவையாறு காவல் துணைக் கண்காணிப்பாளர் ராமதாஸ், திருக்காட்டுப்பள்ளி ஆய்வாளர் (பொ) ஜெகதீசன் ஆகியோர் பார்வையிட்டனர்.

Tags

Next Story